பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வேறுபட்ட கலாச்சாரம் என்று பெங்களூர் மாநகரம் இன்றைய இளைஞர்களின் கனவு தேசமாக திகழ்ந்து வருகிறது.
ஆனால் பெங்களூரின் இந்த முகம்தான் அதன் பாரம்பரியங்களை மறைத்தும், அழித்தும் வருகிறது. இதன் காரணமாகவே 90 லட்சம் மக்கள்தொகை கொண்ட பெங்களூரில் இன்னுமே மனிதர்களின் காலடித்தடங்கள் படாத எண்ணற்ற இடங்கள் இருந்து வருகின்றன.
என்ன செய்வது ஷாப்பிங் மால்களும், டிஸ்கோ தெக்குகளும் தருகின்ற சந்தோஷத்தை இந்த பாரம்பரிய இடங்களில் பெற முடியாது என்றே இளைய தலைமுறை நினைத்துக்கொண்டிருக்கிறது.
ஒருமுறை இந்த இடங்களுக்கு வந்து பாருங்கள் அய்யய்யோ இவ்வளவு நாள் இவற்றையெல்லாம் மிஸ் பண்ணிட்டோமே என்று கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள்.
மகாபோதி சொசைட்டி
கன்னட சினிமாவின் கோடம்பாக்கமாக அறியப்படும் பரபரப்பு மிகுந்த பெங்களூர் காந்திநகர் பகுதியில் அமைதியின் இருப்பிடமாய் திகழும் மகாபோதி சொசைட்டி அமைந்திருப்பது அதிசயமான ஒன்று.
இந்த சொசைட்டி ஒரு பிரார்த்தனை கூடம், ஒரு ஸ்தூபம், ஒரு போதி மரம் அதனடியில் ஒரு புத்தர் சிலை என்று அதன் வளாகத்தில் நுழையும் எவரையும் தனி உலகத்துக்கே அழைத்துச் சென்று விடும்.

இங்கு அமைதியை நாடிவரும் அனைவரும் புத்த பிட்சுகள் மற்றும் இங்கு பயிலும் மாணவர்களின் மாசற்ற புன்னகையை பார்த்த மாத்திரத்திலேயே கவலைகள் அனைத்தையும் மறந்து விடுகிறார்கள்.
பெங்களூரின் வாகன நெரிசலிலிலும், அசுத்தம் நிறைந்த காற்றுக்கு மத்தியிலும் மூச்சு திணறிக்கொண்டிருப்பவர்கள் கட்டாயம் வந்து பார்க்க வேண்டிய இடமிது.
ஓம்கார் ஹில்ஸ்
பெங்களூரின் அதிகம் அறியப்படாத பிக்னிக் ஸ்தலம் இந்த ஓம்கார் ஹில்ஸ். இந்த இடத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள அதிகாலை அல்லது அந்தி வேளையில் வரவேண்டும்.
அதாவது சூரிய உதயம் மற்றும் அஸ்த்தமன காட்சிகளை ஓம்கார் ஹில்ஸ்ஸிலிருந்து பார்த்து ரசிப்பது அற்புதமான அனுபவம். இது தவிர ரிஷிகளின் எண்ணற்ற சிலைகளை இங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் நீங்கள் காணலாம்.
இதெல்லாவற்றையும் விட ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணியோசை எழுப்பும் பிக்பென் கடிகாரத்திற்கு பிறகு உலகின் மிகப்பெரிய கடிகாரமாக கருதப்படும் கடிகாரம் ஒன்று கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
மேலும் இப்பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட துவாதச ஜோதிர்லிங்க கோயில் மகாசிவராத்திரியின் போது ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகிறது.
இந்த ஓம்கார் ஹில்ஸ் செல்வதற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் மற்றும் கே.ஆர் மார்கெட் (கலாசிபாளையம்) பேருந்து நிலையங்களிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிரமிட் வேல்லி
பெங்களூர் எல்லையில் உள்ள ஹாரோஹள்ளி என்ற இடத்தில் பிரமிட் வேல்லி அமைந்துள்ளது. இதன் உண்மையான பெயர் மைத்ரேய-புத்த விஷ்வாலயம் என்றாலும் பரவலாக பிரமிட் வேல்லி என்ற பெயரிலேயே அறியப்படுகிறது.
இந்த பிரமிடினுள் ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து தியானம் செய்யலாம் என்பதோடு, உலகின் மிகப்பெரிய தியான பிரமிட் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

எனவே பெங்களூர் தரும் அலுப்பான வாழ்க்கை முறையிலிருந்து மாற்றம் பெற விரும்புபவர்கள் தாரளமாக இங்கு வரலாம்.
இந்த பிரமிட் வேல்லி செல்வதற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து ஹாரோஹள்ளி அல்லது கனகபுரா போகும் பேருந்தில் ஏற வேண்டும்.
பின்னர் ஹாரோஹள்ளி நிறுத்தத்தில் இறங்கி 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரமிட் வேல்லியை ஆட்டோ மூலம் அடையலாம்.
இராட்சஸ ஆலமரம்
கன்னட மொழியில் 'தொட்ட ஆலத மர' என்று அழைக்கப்படும் இந்த இராட்சஸ ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் பெங்களூரின் கெட்டோஹள்ளி என்ற கிராமப்பகுதியில் 3 ஏக்ரா இடத்தை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இது 2000-ல் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது பல்வேறு மரங்கள் போல் தோற்றமளிக்கிறது.

பெங்களூர்வாசிகளுக்கு மிகச் சிறந்த பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வரும் இந்த ஆலமரம் இருக்கும் இடத்திற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்தும், கே.ஆர். மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலாத் துறை இந்த இடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு உணவகமும் ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications




