திருப்பதி செல்லும் அனைவருமே திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில், கீழ் திருப்பதியில் அலமேலு மங்காபுரம், சீனிவாச மங்காபுரம், இஸ்கான் கோவில் என கோவில்களுக்கு மட்டுமே சென்று விட்டு திரும்பி விடுகிறார்கள். ஆனால் இங்கு சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. இயற்கை அழகை ரசிக்க, அருவிகளில் குளிக்க என ஜாலியான டிரிப்பை அனுபவிக்கவும் திருப்பதி செல்லலாம். இதெல்லாம் திருப்பதியில் எங்கு உள்ளது என சொல்கிறோம். அடுத்த முறை திருப்பதிக்கு போனால் அவசியம் இந்த இடங்களுக்கும் ஒரு விசிட் அடித்து விட்டு வாருங்கள்.

திருப்பதியில் பலரும் அறியாத 7 சுற்றுலா தலங்கள் :
1. சந்திரகிரி கோட்டை
திருப்பதியில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடம் இந்த சந்திரகிரி கோட்டை. இது திருப்பதியில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.11 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் உருவாக்கப்பட்டது. விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்த அரண்மனைகள், கோவில்கள் என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. இந்த கோட்டையை சுற்றி அழகான தோற்றங்கள், இயற்கை அழகு கொட்டி கிடக்கின்றன.
2. தலகோனா நீர்வீழ்ச்சி
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 270 அடி உயரம் கொண்டதாகும். மழைக்காலங்களில் இதன் அழகை பார்ப்பதே தனி சுகமாக இருக்கும். நீர்வீழ்ச்சியின் உச்சி முதல் அடி வரை முழுவதுமாக காண முடியும். காட்டுப்பகுதியில் இயற்கை அழகை ரசித்து மகிழ நினைப்பவர்கள், பறவைகளை ரசிக்க நினைப்பவர்கள், டிரக்கிங் செல்ல நினைப்பவர்கள், நீர்வீழ்ச்சியில் நீராட நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம். திருப்பதியில் இருந்து சென்னை வரும் தேசிய நெடுஞ்சாலையில் 57 கி.மீ., தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
3. சிலா தோரணம்
திருமலைக்கு செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இந்த சிலா தோரணம். இயற்கையாக பாறைகள் ஒன்றிணைந்து தோரணம் போல் அமைந்துள்ள இந்த இடம் நிச்சயம் பிரம்மிப்பை தரும். இந்த பாறைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதாக சொல்லப்படுகிறது. மிகவும் அபூர்வமான, அதிசயிக்க வைக்கும் வகையில் இருக்கக்கூடிய இந்த இடம் அமைதியை உணர்வதற்கும், தியானம் செய்வதற்கும் ஏற்ற இடம்.
4. டீர் பார்க்
திருப்பதியில் அமைந்துள்ள மிகவும் அழகான மான்களின் சரணாலயம் இது. இயற்கையான சூழ்நிலையில் பல வகையான மான்கள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. நகரத்திலிருந்து சற்று ஒதுங்கி இருக்கும் இந்த இடம் இயற்கை அழகு நிறைந்த ஒரு இடமாக உள்ளது. திருப்பதியில் மறக்க முடியாத அனுபவத்தை பெறுவதற்கு ஏற்ற இடம்.
5. கபில தீர்த்தம்
கீழ் திருப்பதியில் இருந்து திருமலை செல்வதற்கு முன்பாக மலை அடிவாரத்திலேயே இந்த கபில தீர்த்தம் அமைந்துள்ளது. பெயர் தான் தீர்த்தம். ஆனால் இங்கு மிகப் பெரிய நீர்வீழ்ச்சி அமைந்துள்ள. மிகவும் புனிதமான தீர்த்தமாக கருதப்படும் இந்த தீர்த்தத்திற்கு அருகிலேயே சிவபெருமான் கோவில் உள்ளது. இயற்கை அழகு நிறைந்து, மனதிற்கு அமைதி தரும் ஒரு அற்புதமான இடம். திருப்பதி செல்லும் அனைவரும் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம்.
6. குடிமல்லம் குகை கோவில்
திருப்பதியின் பெருமைமிகு கலாச்சாரத்தை பாரம்பரியத்தை சொல்லும் இடம் குடிமல்லம் குகை கோவில். இங்குள்ள சிவன், லிங்கமாகவும், உருவமாகவும் ஒரு சேர அமைந்திருப்பது காண்பதற்கு மிகவும் சிலிர்ப்பாக இருக்கும். இது 4ம் நூற்றாண்டில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்ட கோவில் என சொல்லப்படுகிறது. பல புராண கதைகள் இங்கு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. மிகப் பழமையான ஆன்மீக தலமாகவும் இது கருதப்படுகிறது.
7. வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா
திருப்பதியில் உள்ள மிக அற்புதமான விலங்கியல் பூங்கா இது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய விலங்கியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களை கருப் பொருளாகக் கொண்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும். மயில்கள், அரிய வகை விலங்குகள், புலிகள், பச்சை கிளிகள், சிறுத்தைகள் போன்ற பல விதமான உயிரினங்களை இங்கு காண முடியும்.



Click it and Unblock the Notifications






