சௌசட் கம்பா, டெல்லி

முகலாயப்பேரரசர் அக்பரது அவையில் பிரதம மந்திரியாக  இருந்த அடகா கான் என்பவரது மகனான மிர்ஸா அஜிஸ் என்பவரால் தனக்கான சமாதி மாளிகையாக 1623-24ம் ஆண்டுகளில் இந்த சௌசட் கம்பா கட்டப்பட்டுள்ளது.

‘சௌசட்’ மற்றும் ‘கம்பா’ எனும் உருது மொழிச்சொற்களை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இதன் பெயருக்கு ‘64 தூண்கள்’ என்பது பொருளாகும். ஜஹாங்கீர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த சமாதி மண்டபம் உருவாகியுள்ளது.

ஹஸ்ரத் நிஜாமுதீன் பஸ்தி எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த சௌசட் கம்பா ஒரு சதுர வடிவ வளாகமாக வெண் பளிங்குக் கற்களை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பில் 64 தூண்களும் குமிழ் மாடக்கூரையுடன் கூடிய 25 நடை அமைப்புகளும் காணப்படுகின்றன. இந்த மாடக்கூரை அலங்காரம் கட்டிடத்தின் உட்பகுதியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் மேல் கூரை அமைப்பு வெளிப்புறத்தில் தட்டையாகத்தான் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சமாதி அமைப்பு நிஜாமுதீன் ஆன்மீக வளாகத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்கிறது. இந்த சௌஸாத் கம்பாவுக்கு அருகிலேயே அடகா கான் சமாதி, உர்ஸ் மஹால் மற்றும் உருதுக்கவிஞர் மிர்ஸா காலிப்’பின் சமாதி போன்றவையும் காணப்படுகின்றன.

மிர்ஸா காலிப் சமாதியை ஒட்டி அவரது கவிதைகள் மற்றும் படைப்புகள் அடங்கிய ஒரு நூலகமும், அவர் பயன்படுத்திய கலைப்பொருட்கள், ஓவியங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் அமைந்துள்ளன.

Please Wait while comments are loading...