தில்லி ஹாத், டெல்லி

கலை மற்றும் கைவினைப்பொருட்களில் மனதைப் பறிகொடுக்கும் ரசிகராக இருப்பின் நீங்கள் தவறவிடக்கூடாத  ஒரு அம்சம் இந்த  தில்லி ஹாத் எனப்படும் திறந்தவெளி பொருட்காட்சி சந்தையாகும்.

டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக்கழகம் (DTTDC), NMDC நிறுவனம், கைவினைத்தொழில் வளர்ச்சி ஆணையரகம்(DC), கைத்தறி நெசவு ஆணையரகம் (DC), இந்திய அரசு நெசவுத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் போன்ற பல்வேறு அரசாங்க அமைப்புகளின் கூட்டு பங்கேற்பில் இந்த திறந்தவெளி பொருட்காட்சி சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

பாரம்பரிய இந்திய கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தவும், கலைஞர்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய கலை மற்றும் கைவினைத்திறன் அம்சங்கள் அழிந்து போய்விடாமல் பாதுகாக்கவும் இந்த சிறப்பான பொருட்காட்சி சந்தை திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தில்லி ஹாத் எனப்படும் இந்த பொருட்காட்சி சந்தை அல்லது ‘கிராஃப்ட்ஸ் பஜார்’ டெல்லியில் இரண்டு இடங்களில் நடத்தப்படுகிறது. மூன்றாவது சந்தையும் ஜனக்புரி எனும் இடத்தில் 2013ம் ஆண்டிலிருந்து செயல்படுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. 

1994ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பொருட்காட்சி சந்தை ஸ்ரீ அரபிந்தோ மார்க் பகுதியில் உள்ளது. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இரண்டாவது சந்தை பீதாம்புரா பகுதியில் 7.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  இவ்விரண்டு பொருட்காட்சி சந்தைகளுமே மாற்றுத்திறனாளிகள் எளிதில் விஜயம் செய்யக்கூடிய வசதிகளையும், நல்ல கழிவறை மற்றும் ஓய்வறை வசதிகளையும், உணவுக்கூடங்களையும் கொண்டுள்ளன.

இந்த பொருட்காட்சி சந்தைகள் இந்தியா முழுவதிலிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட கைவினைக்கலைஞர்கள் மற்றும் சிறு குழுக்கள் மூலம் நுணுக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட பலவகையான கலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டுள்ளன.

கைவினைத்தொழில் வளர்ச்சி ஆணையரகம்(DC) மூலமாக பதிவு செய்துகொண்ட கலைஞர்கள் உருவாக்கும் கைவினைப்பொருட்கள் மட்டுமே இங்கு காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன.

மேலும், ஒவ்வொரு குறிப்பிட்ட கலைஞருக்கும் 15 நாட்களுக்கு மட்டுமே விற்பனை அங்காடி மாடம் வழங்கப்பட்டு பின்னர் சுழற்சி முறையில் அடுத்தவருக்கு அளிக்கப்படுகிறது.

இது விதவிதமான பொருட்களை பார்வையாளர்கள் பார்த்து வாங்குவதற்கு வழி செய்வதோடு எல்லா கலைஞர்களுக்கும் சமமான சந்தை விற்பனை வாய்ப்பு கிடைக்கவும் உதவுகிறது.

அது மட்டுமல்லாம் நாட்டுப்புற கலைஞர்களின் கலைப்படைப்புகள் மற்றும் கைவினை அழகுப்பொருட்கள் போன்றவை நகர்ப்புற ரசிகர்களை எளிதாக சென்றடைய இந்த பொருட்காட்சி சந்தை அமைப்பு மற்றும் நடைமுறை வசதிகள் பெரிதும் உதவுகின்றன.

வேலைப்பாடுகள் கொண்ட நெசவுத்துணி வகைகள், காலணிகள், பைகள் போன்ற பலவித உபயோகப்பொருட்கள், ரத்தினக்கற்கள், மணிகள், பொம்மைகள், அலங்கார கலைப்பொருட்கள், மரச்செதுக்கு பொருட்கள், உலோகக்கலைப்பொருட்கள் மற்றும் இன்னும் ஏராளமான கைவினைப்பொருட்கள் இந்த சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சந்தைகளுக்கு விஜயம் செய்யும் பார்வையாளர்களுக்கு கைவினைப்பொருட்கள் மட்டுமல்லாது இனிமையான பொழுதுபோக்கு அனுபவத்தையும் அளிக்கும் நோக்கத்துடன் இந்த பொருட்காட்சி சந்தை வளாகங்களில் பலவகையான உணவுப்பண்டங்களை விற்பனை செய்யும் உணவுக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பல மாநிலங்களை சேர்ந்த பலவகை உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது ரசனை மிகுந்த பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் இங்குள்ள திறந்த வெளி கலையரங்கத்தில் தினமும் பலவித கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. மேலும், பொருட்காட்சிக்கு விஜயம் செய்யும் குழந்தைகள் விளையாடுவதற்கென்று தனி விளையாட்டுப்பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த பொருட்காட்சி சந்தை வளாகமும் உள் கட்டமைப்புகளும் பாரம்பரிய இந்திய கலையம்சங்களுடன் ரசிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பசுமையான மரங்கள், மலர்ச்செடிகள் போன்ற இயற்கை அலங்கார அமைப்புகள் இந்த வளாகம் முழுவதும் உருவாக்கப்பட்டு இனிமையான சூழலை பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன.

இப்படி எல்லா வகையிலும் கலா ரசிகர்களுக்கு பிடித்தமான அம்சங்களால் நிரம்பி வழியும் இந்த டெல்லி ‘ஹாட்’ பொருட்காட்சி சந்தை சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய அம்சம் என்பதில் சந்தேகமே இல்லை.

Please Wait while comments are loading...