காந்தி ஸ்ம்ருதி, டெல்லி

காந்தி ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் இந்த பழமையான இல்லத்தில்தான் தேசப்பிதா மஹாத்மா காந்தி தனது வாழ்நாளின் கடைசி 144 நாட்களை கழித்துள்ளார். அக்காலத்தில் இந்த காந்தி ஸ்ம்ருதி இல்லமானது பிர்லா ஹவுஸ் அல்லது பிர்லா பவன் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டின் அரிய தலைவர்களுள் ஒருவராக அறியப்படும் மஹாத்மா காந்தி இந்த இடத்தில்தான் நாதுராம் கோட்ஸே எனும் மனிதனால் 1948, ஜனவரி 30-ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1971ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட பிர்லா இல்லம் 1973 ஆகஸ்ட் 15ம் நாள் முதல் பொதுமக்கள் பார்வைக்கு காந்திஜி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது.

இங்குள்ள தியாகித்தூண் எனப்படும் இடத்தில்தான் காந்திஜி சுடப்பட்டார். மேலும், இந்த நினைவு இல்லத்தில் காந்திஜியின் வாழ்க்கை மற்றும் மரணத்தோடு தொடர்புடைய ஞாபகார்த்தப்பொருட்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒருகாலத்தில் பிர்லா குடும்பத்தினரின் இருப்பிடமாக விளங்கிய இந்த வீடு காந்திஜி டெல்லிக்கு வரும்போதெல்லாம் தங்கும் இடமாக இருந்துள்ளது. தற்போது காந்திஜி மியூசியமாக காட்சியளிக்கும் இந்த இல்லத்தில் அவரது அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய நூல்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த நினைவு இல்ல வளாகத்தில் உள்ள தூணில் ஒரு ஸ்வஸ்திக் சின்னமும் அதற்கு மேலே ‘ஓம்’ என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன.

காந்திஜி நீங்கள் மதிக்கும் மாமனிதர்களுள் ஒருவராக இருப்பின் (அப்படி இல்லாமல் இருக்க வாய்ப்பில்லைதான்) டெல்லி வரும்போது அவசியம் நீங்கள் விஜயம் செய்ய வேண்டிய ஒரு இடமே இந்த காந்தி ஸ்மிருதி.

இந்த சூழலின் நிசப்தமும், ஒரு வரலாற்று கொடுமையின் சாட்சியமாக இருந்த இந்த மண் இன்றும் அந்த சோகத்தை உங்களோடு பகிர்வது போன்ற அமானுஷ்யமும் உங்களால் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது.

உலக வரலாற்றின் பக்கங்கள் முழுதும் மாமனிதர்களின் தியாகக்குருதியால் நிரம்பி உள்ளன எனும் விசித்திரசோகமான உண்மையையும் நம்மால் இந்த ஸ்தலத்தில் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது.

இந்த நினைவு இல்லமானது திங்கள் கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

Please Wait while comments are loading...