இந்தியாவின் மேற்குக்கடற்கரையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் குஹாகர் எனும் இந்த சிறு நகரம் அமைந்துள்ளது. பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும் கம்பீரமான சஹயாத்ரி மலைத்தொடர் மற்றொரு புறமும் இருக்க நடுவில் எழிலுடன் வீற்றிருக்கிறது இந்த நகரம். குஹாகர் எனும் பெயருக்கு குகைவீடு என்பது பொருளாகும்.
கோயில் நகரம்
இங்கு அதிக எண்ணிக்கையில் ஹிந்துக்கோயில்கள் அமைந்திருப்பதால் இதற்கு கோயில் நகரம் என்ற சிறப்பும் உண்டு. சிவனின் பல அவதார வடிவங்களுக்கு இங்கு கோயில்கள் உள்ளன. பால்கேஷ்வர் கோயில், உடலேஷ்வர் கோயில், வியாதேஷ்வர் கோயில், வேலனேஷ்வர் கோயில் மற்றும் தால்கேஷ்வர் கோயில் போன்றவை இங்கு அமைந்துள்ளன.
சந்திகா மந்திர் என்று பிரசித்தமாக அறியப்படும் கோயிலும் இங்குள்ளது. குஹாகர் கடற்கரையை ஒட்டியே ஒரு உத்தர கணபதி கோயிலும் பிரசித்தமாய் உள்ளது. இவை தவிர ஷீ தசபுஜ லக்ஷ்மிகணேச தேவஸ்தானம் மற்றும் மஹேஸ்வரி கோயில் போன்ற கோயில்களும் குறிப்பிடத்தக்கவை.
வருடாவருடம் எண்ணற்ற பக்தர்கள் இங்குள்ள சிவனின் அருளைப்பெற வேண்டியும் மற்ற தெய்வங்களை தரிசிக்கவும் இந்த குஹாகர் நகருக்கு வருகை தருகின்றனர். மிகச்சிறப்பாக மஹாசிவராத்திரி திருவிழாவின் போது இந்த நகரம் பக்தர்களால் நிரம்பிக் காணப்படுகிறது. அச்சமயம் இங்கு ஒரு திருவிழாச்சந்தையும் நடத்தப்படுகிறது.
தனிமையான ஒரு கடற்கரை
அமைதியான எழிலுடன் காணப்படும் இந்த நகரத்தின் கடற்கரை தூரத்தே மறையும் தங்க நிற சூரியனை பார்த்து ரசிக்கவும், நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும், அல்லது ஏகாந்தமாக ஓய்வு எடுக்கவும் மிகப் பொருத்தமான கடற்கரையாகும்.
எப்படி எப்போது இங்கு செல்லலாம்
மேற்குக்கடற்கரையோரம் அரபிக்கடலை ஒட்டி இருப்பதால் இந்த நகரம் கடற்கரைப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது. மழைக்காலம் மற்றும் குளிர்காலம் முடிந்து வரும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலமே இங்கு வருகை தருவதற்கு உகந்த காலமாகும்.
வருடாந்திர சராசரி வெப்பநிலை அதிகபட்சமாக 39°C என்ற அளவிலும் குறைந்தபட்சமாக என்ற 18°C அளவிலும் காணப்படுகிறது. மே மாதத்தில் இங்கு உஷ்ணம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் அக்காலத்தில் பயணம் மேற்கொள்ளாதிருப்பது நல்லது.
வெப்பப்பிரதேசத்துக்குரிய பழங்களான அல்போன்ஸா மாம்பழங்கள், பலாப்பழம், முந்திரி போன்றவையும் இளநீரும் இங்கு அதிக அளவில் கிடைக்கின்றன. இங்குள்ள கடல் உணவு வகைகளும் ருசி பார்ப்பதற்கு மறக்கக்கூடாத அம்சமாகும்.
நீங்கள் சுத்த சைவமாக இருப்பினும் கவலையே வேண்டியதில்லை. நல்ல பிராமண சைவ உணவு வகைகளும் அதே சமயம் அசைவ உணவுகளும் சேர்ந்தே கிடைக்கும் வெகு சில நகரங்களில் குஹாகர் நகரமும் ஒன்று.
புரதானக்கோயில்கள், அருகிலுள்ள அழகான அருவிகள், எழில் கொஞ்சும் கடற்கரைகள், பசுமையான காடுகள் என்று எல்லா சுற்றுலா அம்சங்களையும் கொண்டிருக்கும் இந்த குஹாகர் நகரம் உங்களுக்கு ஒரு மறக்க முடியாத இனிமையான அனுபத்தைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications