ஹைதராபாத் நகரத்தில் மூன்றாம் நிஜாம் மன்னரால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகமே இன்று ஆந்திர பிரதேச மாநில மியூசியம் என்று அழைக்கப்படுகிறது. ஹைதராபாத் நகரத்தின் செழுமையான வரலாற்று பாரம்பரியம் குறித்த ஆழமான புரிதலை பார்வையாளர்களுக்கு வழங்கும் வகையில் இது அமைந்துள்ளது.
1928ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தோ சராசனிக் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது. பப்ளிக் கார்டன்ஸ் தோட்டப்பூங்காவின் மையத்தில் வீற்றுள்ள இந்த - வரலாற்று சாட்சிகள் உறங்கும் -மாளிகைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
இதில் புத்தமஹான் மற்றும் அவரது சீடர்களுக்காக தனியாகவே ஒரு காட்சி மாடம் உள்ளது. மேலும் புத்தர் காலத்தை சேர்ந்த ஏராளமான அரும் பொருட்கள் இந்த மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மனித நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் குறிப்பிடும் வகையில் பிரத்யேக அறைகள் இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அந்தந்த காலகட்டத்துக்குரிய அரும்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் ஹிந்து மற்றும் ஜைன மதங்கள் தொடர்பான பொருட்களை தனித்தனியே உள்ளடக்கிய பிரத்யேக மாடங்கள் இரண்டையும் இங்கு பயணிகள் பார்க்கலாம்.
இந்த இரண்டு மதமும் காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பது குறித்த புரிதலை இந்த காட்சி மாடங்களின் மூலம் பார்வையாளர்கள் பெறலாம். இதர ஆன்மீகம் சார்ந்த அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications