Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தானுல இதுவும் தாங்க இருக்கு.. அடுத்த முறை பாத்துட்டு வாங்க..!

ராஜஸ்தானுல இதுவும் தாங்க இருக்கு.. அடுத்த முறை பாத்துட்டு வாங்க..!

ராஜஸ்தான் என்றாலே சற்று வறண்ட நிலப்பரப்பும் எழிலும் தான் நினைவுக்கு வரும். இங்கே சுற்றுலாவுக்கு ஏற்ற தலங்கள் என்றால் ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதைப்பூர் போன்ற நகரங்கள் புகழ்பெற்றதாக உள்ளன. இங்குள்ள எண்ணற்ற இந்து மற்றும் ஜெயின் கோவில்களில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருப்பதைக் காண முடியும். கலாச்சார மற்றும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கக் கூடிய வகையிலும் பாரம்பரிய கோட்டைகள், அரண்மனைகள், ஹவேலிகள் ராஜஸ்தானில் ஏராளமாக இருக்கின்றன. இத்தகைய ராஜஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் காட்டுயிர் பிரியர்களாக நீங்கள் இருந்தால் எந்தெந்த தலங்களுக்கு எல்லாம் தாராளமாக சென்று ரசித்து வரலாம் என தெரிந்துகொள்வோம் வாங்க.

எங்கவெல்லாம் செல்லலாம் ?

எங்கவெல்லாம் செல்லலாம் ?

ராஜஸ்தானில் ஏராளமான பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றுள் காட்டுயிர் பிரியர்களைக் கவர்வதற்கு ஏற்றதாக கியோலாடியோ தேசிய பூங்கா, கஜனேர் சரணாலயம், மௌண்ட் அபு காட்டுயிர் சரணாலயம், தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம், சீதாமாதா காட்டுயிர் சரணாலயம் உள்ளிட்டவை பிரசிதிபெற்றதாகும்.

Dan Lundberg

கியோலாடியோ தேசிய பூங்கா

கியோலாடியோ தேசிய பூங்கா

ராஜஸ்தானில் உள்ள பரத்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளீர்கள் என்றால் தவறாமல் சென்று வரவேண்டி தலங்களில் ஒன்று கியோலாடியோ தேசிய பூங்கா. இப்பூங்காவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்சமயம் இங்கு 5 வகையான நிலநீர் உயிரினங்களும், 50 வகையான மீன் இனங்களும், 7 வகையான ஆமையினங்களும் வாழ்ந்து வருகின்றன. இதைத் தவிர இந்த பூங்கா 375-க்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கு இயற்கை வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. கியோலாடியோ பூங்காவை தேடி உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பறவை இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் வந்து செல்கின்றன. எனவே அந்த சமயங்களில் நீங்கள் இங்கு வந்தால் கூர்வால் வாத்துகள், கிளுவை வாத்துகள், செம்பவள நிற வாத்துகள் என இன்னும் பல வகையான நீர்ப்பறவைகளையும், அரிய வகை பறவை இனங்களையும் கண்டு ரசிக்க முடியும். அதுமட்டும் இல்லைங்க, விலங்கினமான கருப்பு மான்கள், சிறு கொம்புடைய மான்கள், சாம்பார் மான் போன்றவையும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

Anupom sarmah

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

பரத்பூர் நகரிலிருந்து பேருந்துகள் மற்றும் வாடகைக் கார்கள் மூலம் கியோலாடியோ தேசிய பூங்காவை சுலபமாக அடைந்துவிடலாம். அதோடு உங்களுக்கு தேவையான பட்சத்தில் பூங்காவை சுற்றிப் பார்க்க எலெக்ட்ரிக் வேன்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பூங்காவை கால்நடையாக சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

PJeganathan

கஜனேர் சரணாலயம்

கஜனேர் சரணாலயம்

பிகானேர் நகரத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் பெரும்பாலான பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கஜனேர் சரணாலயம். இங்கு சிறுமான், கருப்புமான், நில்கை மான், பாலைவன நரி மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகியவை காணப்படுகின்றன. இம்பீரியல் மணல் வாத்து மற்றும் நீர்க்கோழி ஆகிய பறவைகள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றன. இந்த பாதுகாப்பு வனப்பகுதி முற்காலத்தில் பிகானேர் மன்னர்களின் வேட்டைப்பிரதேசமாக திகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Daniel Villafruela

மௌண்ட் அபு சரணாலயம்

மௌண்ட் அபு சரணாலயம்

மௌண்ட் அபு மலைப் பிரதேசத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாக இந்த மௌண்ட் அபு காட்டுயிர் சரணாலயம் உள்ளது. ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள 19 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 5 முதல் 8 கிலோ மீட்டர் அகலம் உடைய ஒரு சமவெளிப் பகுதியில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. 1960ம் ஆண்டில் காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த வனப்பகுதியில் பலவிதமான தாவரங்கள் மற்றும் உயிரனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, 800க்கும் மேற்பட்ட தாவர வகைகள், பலவகையான ஆர்க்கிட் மலர்கள் மனதை மயக்கும எழில்காட்சியாக தரிசனம் தரும். தாவரங்களின் பசுமையான அழகு மட்டுமன்றி இங்கு வசிக்கும் பலவகையான உயிரினங்களுக்காகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது. அருகி வரும் உயிரின வகைகள் சில இந்த சரணாலயத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. சிங்கங்கள் மற்றும் புலிகள் ஆகிய பெரிய விலங்குகள் இங்கு வசித்திருந்தாலும் தற்சமயம் சிறுத்தைகள் மட்டுமே இங்கு காணப்படுகின்றன.

CorrectKnowledge

v

v

தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம் முற்காலத்தில் கோட்டா மன்னர்களின் வேட்டைத் தலமாக இருந்ததாகும். தற்சமயம் இந்த தர்ராஹ் காட்டுயிர் சரணாலயம் பல வகை விலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. கரடிகள், மான்கள், கலைமான்கள், சிறுத்தைகள் மற்றும் நில்கை மான்கள் வசிக்கின்றன. குறிப்பாக ஓநாய்கள் மற்றும் கலைமான்களை இங்கு அதிக அளவில் கண்டு ரசிக்கலாம்.

Kbhargava

சீதாமாதா சரணாலயம்

சீதாமாதா சரணாலயம்

சித்தோர்கரில் ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது சீதாமாதா சரணாலயம். மிக அதிகமான தேக்கு மரங்கள் காணப்படும் அடர்ந்த இலையுதிர் காடுகளை இது கொண்டுள்ளது. மேலும், மூங்கில், சலார், நெல்லி மற்றும் பேல் மரங்கள் இந்த வனப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. ஜகம் மற்றும் கர்மோய் ஆகிய இரு ஆறுகளும் இந்த சரணாலயத்தின் வழியே பாய்கின்றன. இவற்றில் ஜகம் ஆற்றின் குறுக்கே ஒரு அணையும் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சரணாலயங்களுக்கு பயணம் செய்வோர் இந்த சரணாலயத்தை தவறவிடாததற்குக் காரணமும் உள்ளது. ராமபிரான் தன் மனைவி சீதாதேவியுடன் வனவாசம் மேற்கொண்டபோது இங்கிருந்த வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்ததாக நம்பப்படுகிறது. இதனாலேயே சீதாமாதா சரணாலயம் என்றும் பலரால் இது அறியப்படுகிறது.

Hemant Shesh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X