» »தமிழகத்தின் உயரமான கோயில் கோபுரங்கள்!

தமிழகத்தின் உயரமான கோயில் கோபுரங்கள்!

Posted By: Staff

கோபுரம் என்ற சொல் முன்பு கோயில் நுழைவாயில் அமைப்பை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புகளையும் குறிக்க பயன்பட்டது.

ஆனால் இன்று இது கோயில் கோபுரங்களையே பெரிதும் குறித்தாலும், உயரமான பிற கட்டிட அமைப்புக்களையும் கோபுரம் என்ற பெயர் கொண்டு அழைப்பதுண்டு. அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஈஃபில் கோபுரத்தை சொல்லலாம்.

கோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து காட்சியளிப்பவையெல்லாம் கோபுரங்கள் என்று சொல்ல முடியாது. தமிழ் நாட்டில் 6 முதல் 10-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களில் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புகள் விமானங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

அதாவது கருவறைக்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும் இவை விமானங்கள் என்றும், கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும் அமைப்புகள் கோபுரங்கள் என்றும் அறியப்படுகின்றன. குறிப்பாக தஞ்சை பெரிய கோயிலில் பிரம்மாண்டமாக காட்சி தருபவை விமானங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கம்

ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கம்

இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயிலின் கோபுரமே நாட்டின் உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மொத்தம் 21 கோபுரங்களை கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரம் 236 அடி உயரத்தில் ஆசியாவிலேயே 2-வது உயரமான கோபுரமாக அறியப்படுகிறது. எனினும் ஏனைய 20 கோபுரங்கள் 14 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருந்தாலும், ராஜாகோபுரம் மட்டும் 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதாவது 400 ஆண்டு காலமாக 55 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த கோபுரம் 236 அடி உயரத்தில் அஹோபிலா மடத்தால் முழுமை பெற்றது.

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயிலில் மொத்தம் 4 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கில் அமைந்துள்ள கோபுரம் ராஜகம்பீரமாக 217 அடி உயரத்தில் தமிழகத்தின் 2-வது உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகிறது. இந்த கோபுரத்தின் அடித்தளம் கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் கிருஷ்ணதேவராயரால் கட்டத்துவங்கப்பட்டு, நாயக்கர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது.

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் 11 அடுக்குகள் கொண்ட 193 அடி உயர ராஜகோபுரம் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக கருததப்பட்டது. இந்தக் கோயிலை பெருமைப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஆண்டாள் கோயிலின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர்

உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர்

உலகை தன் வலது காலால் அளந்த விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமனனுக்காக 'உலகளந்த பெருமாள் கோவில்' அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கோபுரம் 192 அடி உயரத்தில் தமிழகத்தின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் விக்ரகம் முன்புறத்தில் 16 கைகளுடன் சக்ரத்தாழ்வாராகவும், பின்பக்கத்தில் நரசிம்மர் வடிவத்திலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏகாம்பரநாதர் கோயிலின் ராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்த கோபுரம் 192 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கோபுரம் கி.பி.17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீக்கிரையாகி 1967 வரை மொட்டையாய் பொலிவிழந்து நின்றது. பின்னர் 1963-ல் இராஜகோபுரத் திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990-ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

படம் : pandiaeee

மீனாட்சியம்மன் கோயில், மதுரை

மீனாட்சியம்மன் கோயில், மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது. மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது.

சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்

சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம்

கும்பகோணத்தில் உள்ள விஷ்ணு கோயில்களிலேயே மிகப்பெரிய கோயிலாக சாரங்கபாணி சுவாமி கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயில் ஒரு தேர் வடிவத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் ராஜகோபுரம் 173 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிப்பதுடன் பல்வேறு சமயக்கதைகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.

ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி

ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி

ராஜகோபாலசுவாமி கோயில் குலோத்துங்க சோழரின் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டு, அவருக்குப் பின் வந்த பல்வேறு சோழ மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மொத்தம் 16 கோபுரங்கள் இருப்பதுடன், இதன் ராஜகோபுரம் இந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.