நேஷனல் சைன்ஸ் சென்டர் என்று அழைக்கப்படும் இந்த தேசிய அறிவியல் மையம் உண்மையில் ஒரு அறிவியல் அருங்காட்சியகமாகும். 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அறிவியல் மையம் டெல்லியில் பிரகதி மைதான் வாசல் எண்:1 க்கு அருகிலேயே பைரோன் சாலையில் அமைந்துள்ளது.
NCSM எனப்படும் ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் சைன்ஸ் மியுசியம்ஸ்’ எனும் அரசுக்குழுமத்தின் ஒரு அங்கமாக இந்த அறிவியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
எட்டு தளங்களை கொண்ட இந்த மையத்தில் அறிவியல், கட்டிடக்கலை மற்றும் வரலாறு என்ற மூன்று பிரிவுகளாக அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
அறிவியல் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இந்த மையத்தில் பல்வேறு காட்சிக்கூடங்கள் மற்றும் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கும்,பள்ளி மாணவர்களுக்கும் இங்குள்ள காட்சிப்பொருட்கள் மிகவும் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மனித உயிரியல் காட்சிக்கூடம், பாரம்பரிய காட்சிக்கூடம், டைனசார் காட்சிக்கூடம், விளையாட்டு அறிவியல் காட்சிக்கூடம், புராதன இந்திய அறிவியல் பிரிவு மற்றும் தொழில்நுட்பப்பிரிவு போன்றவை இங்குள்ள காட்சிக்கூடங்களில் குறிப்பிடத்தக்கவை. வேதக் கணிதவியல், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் டி.என்.ஏ அறிவியல் ஆகிய தலைப்புகளிலும் தனிப்பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
எனர்ஜி பால் எனப்படும் சக்திக்கோள அமைப்பு இந்த தேசிய அறிவியல் மையத்தின் வாசலிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. சுவாரசியமான மல்ட்டிமீடியா காட்சிக்கூடம் ஒன்றும் வேறெங்கும் இல்லாத சிறப்பம்சமாக இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகை நாட்களை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் இந்த தேசிய அறிவியல் மையம் / அருங்காட்சியகமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்துள்ளது.