துவாரகா -  குஜராத் மாநிலத்தின் ஆன்மீக கேந்திரம்!

துவாரவதி என்ற சம்ஸ்கிருத பெயராலும் அறியப்படும் துவாரகா நகரம் இந்தியாவிலுள்ள ஏழு புனிதமான நகரங்களில் ஒன்றாகும். ஷீ கிருஷ்ணர் வாழ்ந்த இடமாக இது இந்து இதிகாசங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சார் தாம் எனப்படும் நான்கு முக்கிய புண்ணிய யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவும், சப்தபுரி எனப்படும் ஏழு புனித நகரங்களில் ஒன்றாகவும் இது ஐதீக நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புராண முக்கியத்துவம்

மதுராவை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னனும் தனது மாமனுமான கம்சனை ஷீ கிருஷ்ணர் கொன்றழித்தார். இது யாதவ குலத்தார்க்கும் கம்சனின் மாமனாரான ஜராசந்தனுக்கும் இடையே தீராப்பகையை உருவாக்கியது.

கம்சனை கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக ஜராசந்தன் யாதவர்கள் மீது 17 முறை தாக்குதல் நடத்தினார். எனவே கிருஷ்ணர் தனது யாதவ குலத்தாரை இடம் பெயர்த்து கிர்ணார் மலைப்பகுதியை கடந்து சௌராஷ்டிரா எனும் இப்போதைய குஜராத் பகுதிக்கு குடியேறச்செய்தார்.

இப்படி போர்ப்பாதையிலிருந்து விலகியதால் கிருஷ்ணருக்கு ரண்சோத்ராய் எனும் பெயர் வழங்கப்பட்டது. ஓக்கா எனும் துறைமுகப்பகுதிக்கு அருகிலுள்ள பெய்த் துவாரகா எனும் இடத்தில் அவர் தனது இனத்தார்க்கான குடியிருப்புகளை நிர்மாணிக்கச்செய்தார்.

இங்கு அவர் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்ததாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் மரணத்திற்கு பிறகு இந்த நகரத்தை மாபெரும் வெள்ளம் மூழ்கடித்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி ஏழு முறை வெள்ளத்தால் மூடப்பட்டு ஏழாவது முறையாக இதே இடத்தில் உருவான நகரமே இப்போதுள்ள துவாரகா என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.

புனித நகரம்

துவாரகா எனும் பெயரிலுள்ள ‘த்வார்’ என்பது வாசலை குறிக்கிறது. துவாரக என்பதற்கு பிரம்மனை அடையும் வாசல் என்பது பொருளாகும். வைணவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் மத்தியில் இந்த துவாரகா நகரம் முக்கியமான புனித நகரமாக வணங்கப்படுகிறது.

இங்குள்ள ஜகத்மந்திர் எனும் கோயிலில் த்வாரகாதீஷ் எனும் கிருஷ்ணரின் அவதாரம் வீற்றிருக்கிறது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஷ்வர ஜோதிர்லிங்கம் இந்த துவாரகா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

பேட் துவாரகா

இந்த இடத்தில்தால் கிருஷ்ணர் தனது இனத்தார்க்கான ராஜ்ஜியத்தை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தீவுப்பகுதியான இது கட்ச் வளைகுடாப்பகுதியில் அமைந்துள்ளது.

ஓக்கா துறைமுகம் அமைக்கப்படுவதற்கு முன்பு இப்பிரதேசத்தின் முக்கிய துறைமுகமாக இந்த பேட் துவாரகா விளங்கியிருக்கிறது. ஓக்கா படகுத்துறையை அடைந்து அங்கிருந்து ஃபெர்ரி பயணிகள் படகு மூலமாக இந்த தீவுக்கு செல்லவேண்டியுள்ளது.

தொல் ஆய்வு முடிவுகளின் மூலம் இந்த தீவுப்பகுதியில் கிடைக்கும் சான்றுகள் கி.மு 3 ம் நூற்றாண்டுக்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தில் மஹாவிஷ்ணு ஷங்காசுரா எனும் அசுரனை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தீவுப்பகுதிக்கு பேட் ஷங்கோதரா என்ற பெயரும் உண்டு.

பேட் துவாரகா திவுப்பகுதியில் டால்பின்கள் மற்றும் கடல் உயிரினங்களை பார்த்து மகிழும் வகையில் கடல் சுற்றுலா செல்ல வசதிகள் உள்ளன. பிக்னிக் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், கூடாரத்தங்கல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் இந்த தீவுப்பகுதி உகந்தது.

புவியியல் இருப்பிடம்

துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குஜராத் தீபகற்பத்தின் மேற்குக்கோடி முனையில் இந்த துவாரகா நகரம் வீற்றிருக்கிறது.

சுற்றுலா அம்சங்கள்

துவாரகா மற்றும் பேட் துவாரகா நகரத்திலும் அவற்றை சுற்றியுள்ள இடங்களிலும் ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. துவாரகதீஷ் கோயில், நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில், மீராபாய் கோயில், ஷீ கிருஷ்ணா கோயில், ஹனுமான் கோயில் மற்றும் பேட் துவாரகாவில் உள்ள கச்சோரியு போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும்.

இப்படி ஏராளமான ஆன்மிக திருத்தலங்களை கொண்டிருப்பதால் குஜராத் மாநிலத்தில் யாத்ரிகர்கள் அதிகம் விஜயம் செய்யும் நகரமாக இந்த துவாரகா நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.

Please Wait while comments are loading...