போர்பந்தர் - ஒரு சகாப்தத்தின் வரலாறு ஆரம்பித்த இடம்!

போர்பந்தர், குஜராத்தில் உள்ள ஒரு பழம்பெரும் துறைமுக நகரமாகும். கதியபாரின் கரையோரத்தில் அமைந்துள்ள இது காந்திஜியின் பிறப்பிடமாக பொதுவாக அறியப்படுகிறது.

வரலாறு

இந்தியப் புராண இலக்கியங்களின் படி, கிருஷ்ண பகவானின் தோழரான சுதாமாவின் பிறப்படமாகக் கருதப்படுவதனால் போர்பந்தர், “சுதாமாபுரி” என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது.

பெய்த் துவாரகா காலத்தைச் சேர்ந்ததான ஹரப்பா நாகரீகத்தின் மிச்சங்களை, இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வெளிக்கொணர்ந்துள்ளன. 16 ஆம் நூற்றாண்டின் போது ஜெத்வா ரஜபுத் இனத்தவரே போர்பந்தரை ஆட்சி புரிந்து வந்த குடும்பத்தினராய் விளங்கினர்.

அவ்வமயம் இது குஜராத்தைச் சேர்ந்த, மொகலாய ஆளுநரின் கீழ் செயல்பட்டு வந்த, ஒரு மாநிலமாக இருந்துள்ளது. இதன் பிறகு, கெயிக்வாட்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த வந்த போர்பந்தர், பின்னர் ஆங்கிலேயரின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது.

மொகலாயர்கள், பேஷ்வாக்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிகளின் கீழ் போர்பந்தர், கிழக்கு ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்களைக் கொண்ட, ஒரு பரபரப்பான வணிக மையமாக விளங்கி வந்துள்ளது.

இந்திய விடுதலையின் போது, ‘கதியவாரின் ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலத்தின்” பகுதியாக போர்பந்தர், குஜராத் மாநிலத்தின் ஒரு அங்கமாக இந்தியாவில் இணைக்கப்பட்டிருக்கிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

போர்பந்தர் பறவைகள் சரணாலயம், மியானி கடற்கரை, பர்டா மலையின் வனவிலங்குகள் சரணாலயம், கீர்த்தி மந்திர், போர்பந்தர் கடற்கரை ஆகியவை போர்பந்தரில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்களாகும்.

காந்திஜி மற்றும் அவரது மூதாதையர்களின் வசிப்பிடமாக விளங்கிய கீர்த்தி மந்திர், தற்போது அருங்காங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டுள்ள பாரத் மந்திர், இங்குள்ள மற்றொரு அருங்காட்சியகமாகும்.

பர்டா மலையின் வனவிலங்குகள் சரணாலயம், முன்னர் அரசுரிமை பெற்ற ராணாவாவ் மாநிலமாக இருந்த, போர்பந்தருக்குச் சொந்தமான தனியார் சொத்தாக இருந்துள்ளது.

இக்காரணத்தினால், ராஜா என்ற அர்த்தம் கொண்ட வார்த்தைகளான ராணா மற்றும் ஜாம் என்ற வார்த்தைகளில் இருந்து ராணா பர்டா மற்றும் ஜாம் பர்டா என்ற பெயர்களில் இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது.

சரணாலயத்தின் பக்கவாட்டில் கழிவுநிலங்கள், காடுகள் மற்றும் விளைநிலங்கள் ஆகியவை அமையப்பெற்றுள்ளன. இக்காட்டில் பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பல்வேறு வகையான செடி வகைகளும் காணப்படுகின்றன.

வெவ்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், சிங்கம், சிங்காரா, சாம்பார் மான்கள், புள்ளி மான்கள், புள்ளியிட்ட பருந்து மற்றும் கொண்டையுடன் கூடிய ராஜாளிப் பருந்து ஆகியவை இக்காட்டில் காணப்படும் சிலவகை விலங்கினங்களாகும்.

புவியியல்

கதியபாரின் ஒரு பகுதியான போர்பந்தர், குஜராத்தின் மேற்குக்கரையில், அரேபியப் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. பர்டா மலைகள் போன்ற சில மலைப்பிரதேசங்கள் தவிர்த்து இந்த இடம் தங்கநிறக் கடற்கரைகளைக் கொண்ட சமதளமாகவே பெரும்பாலும் காணப்படுகிறது.

இதன் ஒரு புறம் அரேபியப் பெருங்கடலும், எஞ்சியிருக்கும் மற்ற மூன்று புறங்களிலும் பன்வாத், உப்லெடா மற்றும் கெஷோத் போன்ற நகரங்களும் காணப்படுகின்றன.

வானிலை

அரேபியப் பெருங்கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள காரணத்தினால் போர்பந்தர் மிதமான கோடைகளையும், ரம்மியமான குளிர்காலங்களையும் கொண்ட மட்டான தட்பவெப்பநிலைகளுடன் காணப்படுகிறது.

கடல் காற்றினால் உண்டாகும் இடிமுழக்கங்களோடும், அதீத மழைப்பொழிவுகளோடும் இருக்கக்கூடிய மழைக்காலம் முன்னரே கணிக்க இயலாத மழைப்பொழிவுகளுடன் காணப்படுகிறது. அருகில் கடல் இருக்கும் காரணத்தினால் வானிலை, பொதுவாக ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

இணைப்புத்திறன்

போர்பந்தர் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களோடும் சாலை, இரயில் மற்றும் வான் வழி போக்குவரத்து சேவைகளால் ஒழுங்கான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

போர்பந்தர் இரயில் நிலையம் மற்றும் போர்பந்தர் விமான நிலையம் ஆகியவை உள்ளூர் மற்றும் சர்வதேசப் பயணிகளின் தேவைகளுக்கேற்ப சேவையாற்றுகின்றன. நகரத்தின் உள்ளே பயணிப்பதற்கு ஏதுவாக மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷாக்கள் காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...