சோம்நாத் - இறைவனின் திருமடம்!

சோம்நாத் கோயில், இந்தியாவெங்கிலும் உள்ள இந்துக்களால் புனிதமானதாக வழிபடப்பட்டு வரும் ஜோதிர்லிங்க சந்நிதிக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.

சோம்நாத்தின் வரலாறு!

தக்க்ஷா பிரஜாபதியின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்று தனது புத்திக்கூர்மையைத் திரும்பவும் அடையும் பொருட்டு, சந்திரக் கடவுளான சோமா, பிரதான கோயிலை முதலில் தங்கத்தால் கட்டினார் என்றும், பின்னர் சூரியக் கடவுளான ரவி வெள்ளியால் கட்டினார் என்றும், அதன் பின்னர் ஸ்ரீ கிருஷ்ண பகவான் மரத்தால் கட்டினார் என்றும் நம்பப்பட்டு வருகிறது.

சோலாங்கி ரஜபுத்களால் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள கல்லாலான புதிய கோயில் சாளுக்கியரின் பாணியைத் தழுவி, சுமார் 50 அடி உயர கோபுரத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

மிகக் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இக்கோயிலின் சுவர்களில் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இங்கு நந்தி சிலை ஒன்றும், கோயிலின் மத்தியப் பகுதியில், இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகிய சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகின்றன.

பிரதான சந்நிதானம் பரந்து விரிந்த முற்றத்தை முன்பக்கத்திலும், கூம்பு வடிவ அமைப்புகளை கோயில் கோபுரத்திலும் கொண்டு எழிலுடன் காட்சியளிக்கின்றது.

உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இக்கோயில், 1951 ஆம் ஆண்டில் சர்தார் பட்டேல் அவர்களின் முயற்சியால் மறுசீரமைக்கப்பட்டு, தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது.

சோம்நாத் கோயில் சுமார் ஆறு முறை படையெடுக்கப்பட்டுள்ளது. அசல் கோயிலை ஏழு முறை மறுசீரமைத்த பின்னரே தற்போதுள்ள கோயில் வடிவத்துக்கு வந்துள்ளது.

புவியியல்

கடலோர நகரமான சோம்நாத், சௌராஷ்டிரா தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ளது. ஒருபுறம் அரேபியப் பெருங்கடலையும், வடக்குப்புறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் வெராவலையும் கொண்டுள்ள இது, அஹமதாபாத்திலிருந்து சுமார் 407 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கலாச்சாரம்

சோம்நாத், இந்தியாவின் புராண மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. இங்குள்ள மக்கள் அதீத மதநம்பிக்கை உடையவர்களாகவும், அனைத்து பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் தவறாது கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். அனைத்து பண்டிகைகளும் மிகவும் ஆர்வத்தோடு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

வானிலை

அரேபியப் பெருங்கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் சோம்நாத் மிதமான வானிலையையே கொண்டிருக்கிறது. கோடைகள் ஓரளவு வெம்மையுடனும், குளிர்காலங்கள் மிதமானவையாகவும் உள்ளன.

மழைக்காலத்தின் போது, இங்கு பெருங்காற்றோடு சேர்ந்து கனமழை பொழிகின்றது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலமே சோம்நாத் செல்ல மிகவும் ஏற்ற காலமாகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

பிரதான கோயிலாக விளங்கும் மஹாதேவ் கோயில் தவிர்த்து, சூரியனார் கோயில் போன்ற இதர கோயில்களையும் சோம்நாத்தில் காணலாம். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள சூரியனார் கோயில், சூரியக் கடவுள் மற்றும் அவரது இரு ஏவலாள்களின் சிலைகளையும் கொண்டிருக்கிறது.

பல்கா தீர்த்தா என்ற இடத்தில் தான் பில் என்ற மலைஜாதி இனத்தைச் சேர்ந்த ஜரா என்பவனால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் தவறுதலாக அம்பெய்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். டெஹோத்ஸர்க் தீர்த் என்ற இடத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

சோம்நாத் கடற்கரை இங்குள்ள மற்றொரு சுற்றுலாத் தலமாகும். இந்த கடற்கரை நீச்சலுக்கு ஏற்றதல்ல; ஏனெனில், இங்கு அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்.

எனினும், இந்த கடற்கரை, இயற்கையோடு இயைந்த ஒரு சுகானுபவத்தை அளிப்பதுடன் ஒட்டகச் சவாரி மற்றும் சுவையான உணவு வகைகள் போன்ற பல கேளிக்கைகளை வழங்குகிறது.

அஹமத்பூர் மாண்ட்வி என்ற கடற்கரை, நீச்சல் மற்றும் பல்வேறு நீர் விளையாட்டு அனுபவங்களை வழங்கக்கூடியதாகத் திகழ்கிறது. டையூ தீவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இக்கடற்கரை, பளிங்கு போன்ற தெள்ளத் தெளிவான தண்ணீருடன் காணப்படுகிறது.

இங்கு காணப்படும் போர்த்துக்கீசிய மற்றும் சௌராஷ்டிர பாணிகளின் கலவையான பாணியிலான உணவு வகைகள் மற்றும் கலாச்சாரம், இவ்விடத்துக்கு வரும் எவரும் மிகவும் அனுபவித்து ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

புத்த மதத்தைச் சேர்ந்த சனா குகைகள், மாய் பூரி மஸ்ஜித், வெராவல் போன்றவை இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இதர ஸ்தலங்களாகும்.                  

Please Wait while comments are loading...