தமன் & தியூ சுற்றுலா – இயற்கையோடு ஒரு சந்திப்பு!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

இயற்கை அழகும், நிசப்தமும் பரவியிருக்கும் ஒரு எழிற்ஸ்தலத்துக்கு விடுமுறை சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உங்கள் மனதில் நிறைவேற்றப்படாமல் இருந்தால்…அரபிக்கடலை ஒட்டி அமைந்திருக்கும் இந்த தமன் & தியூ இந்திய யூனியன் பிரதேசத்தை கண்டிப்பாக பரிசீலிக்கலாம்.

போர்த்துகீசிய ஆளுகைக்குள் இருந்துவந்த இந்த இரண்டு பகுதிகளும் 1961ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இந்திய குடியரசுடன் கோவாவுடன் சேர்த்து இணைக்கப்பட்டன.

இந்த தமன் மற்றும் தியூ மாவட்டப்பகுதிகள் முற்காலத்தில் பல போர்களை சந்தித்திருப்பதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, போர்த்துகீஸ் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பேசப்படுகின்றன.

தமன் சுற்றுலா – ஒரு சுருக்கமான வரலாறு

தமன்கங்கா ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் இந்த யூனியன் பிரதேச மாவட்டம் அமைந்துள்ளது. இறுக்கமற்ற உல்லாச வாழ்க்கை இயல்புடன் காட்சியளிக்கும் இது தன் இயற்கை எழில் அம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு இனம் மற்றும் கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அழகிய கடற்கரைகள், போர்த்துகீசிய கட்டிடச்சின்னங்கள் மற்றும் கிறித்துவ தேவாலயங்கள் போன்றவற்றை இந்த தமன் மாவட்டம் கொண்டுள்ளது.

இந்த அழகிய பிரதேசம் ஒரு காலத்தில் ‘கலானா பாவ்ரி’ அல்லது ‘லோட்டஸ் ஆஃப் மார்ஷ்லேண்ட்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. மோதி தமன் மற்றும் நனி தமன் என்ற இரண்டு நகர்ப்பிரிவுகளாக தமன்கங்கா ஆறு இந்த தமன் மாவட்டத்தை பிரிக்கிறது.

தமன் – கலாச்சார பன்முகத்தன்மை

தமன் நகர சுற்றுலா அம்சங்களில் பலவிதமான கலாச்சாரங்களின் கலவையான பாதிப்பு பிரதிபலிக்கிறது. ஆதிகுடி கலாச்சாரம், ஐரோப்பிய கலாச்சாரம், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நவீன பெருநகர கலாச்சாரம் போன்றவற்றை இங்கு உணரமுடியும்.

தமன் பிரதேசத்தின் அழகிய கடற்கரைகள் சூரியக்குளியலுக்கு ஏற்ற இயற்கைத் தூய்மையோடு ஒளிர்கின்றன. கடற்கரையை ஒட்டியிருப்பதால் இங்கு புத்தம் புதிதாய் சமைக்கப்படும் கடல் உணவு வகைகள் அவற்றின் தனித்தன்மையான சுவைக்கு புகழ் பெற்றுள்ளன.வருடம் முழுவதும் இனிமையான பருவநிலையுடன் காட்சியளிக்கும் தமன் நகரத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரியாக இங்கு வெப்பநிலை 39°C முதல் 11°C டிகிரி வரை காணப்படுகிறது. கடலில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் கோடைக்காலத்தின் வெப்பம் வெகுவாக தணிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் துவக்கம் முதல் மே மாத இறுதி வரையிலான காலம் இங்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலமாக உள்ளது.

தமன் நகரம் மற்றும் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்

ஜம்போர் பீச், தேவ்கா பீச், வைபவ் வாட்டர் வேர்ல்டு, ‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்’, ஃபோர்ட் ஆஃப் செயிண்ட் ஜெரோம் ஆகிய சுற்றுலா அம்சங்கள் தமன் சுற்றுலாவில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

தியூ சுற்றுலா – சுருக்கமான வரலாற்றுப்பின்னணி

அமைதியான சூழல் மற்றும் சுவாரசியமான வரலாற்றுப்பின்னணி ஆகியவற்றை கொண்டுள்ள தியூ நகரம் குஜராத் மாநில சௌராஷ்டிரா (கத்தியவாட்) தீபகற்ப பகுதியின் தென்முனையில் அரபிக்கடலால் சூழப்பட்டு வீற்றிருக்கிறது.

புராதன காலத்திலும் வரலாற்று காலத்திலும் இந்த தியூ தீவு பல மன்னர்கள் மற்றும் ராஜ வம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. ஒரு குறுகிய கால்வாய் ஒன்று தியூ தீவுப்பகுதிக்கும் கடற்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே மிக குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஒன்பதாவது யூனியன் பகுதியாக இந்த தியூ நகரம் விளங்குகிறது.

தியூ பருவநிலை

கடற்காற்று வீசும் இனிமையான பருவநிலையை கொண்டிருக்கும் தியூ நகரம் சுற்றுலா பயணிகள் விரும்பக்கூடிய நிசப்தம் நிரம்பிய அமைதி ஸ்தலமாக காட்சியளிக்கிறது.

வருடமுழுதுமே தெளிவான இனிமையான பருவநிலையை இது கொண்டிருக்கிறது. தியூ கடற்கரைப்பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் ஆண்டு முழுவதும் திரளாக விஜயம் செய்தவண்ணம் உள்ளனர்.

தியூ நகரத்தின் உயிரோட்டம் மிக்க கலாச்சாரம்

செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஏராளமான அம்சங்களை இந்த தியூ பகுதியில் பயணிகள் தரிசிக்க முடியும். போர்த்துகீசிய, கத்தியவாடி மற்றும் சௌராஷ்டிரிய கலாச்சாரங்களின் கலவையான பாரம்பரியம் இங்கு காணப்படுகிறது.

இங்குள்ள கட்டிடக்கலை அம்சங்களில் போர்த்துக்கீசிய பாணியின் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. இங்குள்ள மக்கள் தொகையில் ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறித்துவர்கள் போன்ற மதத்தை சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர்.

தியூ நகர்ப்பகுதிக்கு முக்கிய நகரங்களான அஹமதாபாத், ராஜ்கோட், பவ்நகர் மற்றும் வடோடராவிலிருந்து சிறந்த போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.

தியூ நகர்ப்பகுதியின் முக்கிய சுற்றுலா அம்சங்கள்

கோக்லா எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் கோக்லா பீச் கடற்கரை, நகோவா பீச் கடற்கரை, கங்கேஷ்வர் கோயில், செயிண்ட் பால் சர்ச் மற்றும் தியூ பகுதியிலேயே மிகப்பழமையான சர்ச் ஆஃப் செயிண்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அசிஸி ஆகியவை தியூ பகுதியில் பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.

செயிண்ட் தாமஸ் சர்ச், ஜலந்தர் பீச், சீ ஷெல் மியூசியம், தியூ கோட்டை ஆகிய இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் குறிப்பிடத்தக்கவை.கடந்த கால உன்னதங்களை அசை போட வைக்கும் அற்புத கட்டிடக்கலை அம்சங்கள், நிசப்தம் நிரம்பிய தூய்மையான சூழல், வெண்மணற்பரப்புகளை கொண்ட கடற்கரைகள், ரம்மியமான பசுமைக்காட்சிகள் போன்றவை இந்த தமன் & தியூ யூனியன் பிரதேசத்தை சுற்றுலாப்பிரியர்கள் தேடி விஜயம் செய்யும் ஸ்தலமாக மாற்றியுள்ளன.

Please Wait while comments are loading...