இந்தியாவின் ஒப்புயர்வற்ற புனித ஸ்தலமாக திகழ்ந்து வரும் புஷ்கர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சிறிய நகரம் பற்றிய குறிப்புகள் ஃபா-ஹீன் எனும் 4-ஆம் நூற்றாண்டு சீன தேசத்துத் பயணியின் பயண நூல்களில் ஏராளம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மகாகவி காளிதாசர் தன்னுடைய அபிக்யான் சாகுந்தலம் என்னும் நாடகத்தில் புஷ்கர் நகரம் குறித்து புகழ் பாடியிருக்கிறார்.
புஷ்கர் என்ற இந்த சிறு நகரம் 400 கோயில்களையும், 52 மலைத்தொடர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலை போன்று பிரம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் கோயில்களை நீங்கள் இந்தியாவின் ஒரு சில இடங்களில்தான் காண முடியும். இது தவிர வரஹா கோயில், அப்தேஷ்வர் கோயில், சாவித்திரி கோயில் உள்ளிட்டவைகள் புஷ்கரின் பிரபலமான ஆலயங்கள்.
புஷ்கர் நகரில் உள்ள புனித புஷ்கர் ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம். ஒருமுறை வஜ்ர நாப் எனும் அரக்கனை தாமரை பூவினைக் கொண்டு பிரம்மா வதம் செய்தபோது, அத்தாமரை மலரிலிருந்து மூன்று மடல்கள் கீழே விழுந்தன.
அதில் ஒரு மடல் புஷ்கர் நகரில் விழுந்த இடமே புனித புஷ்கர் ஏரியாக தோற்றம் கொண்டதாக புராணச் செய்தி கூறுகிறது. இந்த புனித ஏரியில் பௌர்ணமி தினத்தன்று நீராடினால் ஒருவர் வாழ்வில் செய்த அத்தனை பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவார் என்று நம்பப்படுகிறது.
புஷ்கர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் 'புஷ்கர் கால்நடை சந்தை' உலகப் புகழ்பெற்றது. இதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய கால்நடை வணிக சந்தையாக கருதப்படுகிறது. இந்த சந்தையில் கால்நடை வியாபாரத்தை தவிர ராஜஸ்தானிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் அமசங்களும் காட்சிப்படுத்தப்படும்.
புஷ்கர் நகரை உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் சுலபமாக அடைந்து விடலாம். இந்த நகரத்துக்கு வெகு அருகாமையிலேயே ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையமும், அஜ்மீர் ரயில் நிலையமும் அமைந்திருக்கின்றன.
மேலும் அஜ்மீர் நகரை ஜெய்ப்பூர், ஜெய்சல்மேர், உதைப்பூர் போன்ற ராஜஸ்தானின் முக்கிய நகரங்களிலிருந்து சாலை மூலமாக எளிதாக அடைந்து விட முடியும்.
புஷ்கர் நகரை அதன் குளிர் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. இந்தக் காலங்களில் புஷ்கரின் வெப்பநிலை 8 டிகிரி முதல் 25 டிகிரி வரை பதிவாகும். எனவே குளிரின் ஸ்பரிசத்தை உணர விரும்பும் பயணிகள் புஷ்கர் நகரை பனிக்காலங்களில் அணுகுவதுதான் சிறப்பானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications