குலு – இமயமலையில் ஒரு சொர்க்கலோகம்

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள குலு மாவட்டம் ‘தேவர்கள் வசிக்கும் பூமி’ என்ற கீர்த்தியுடன் அறியப்படும் மலைப்பிரதேசமாகும். பல ஹிந்து கடவுளர்களும் தெய்வங்களும் இந்த மலைப்பகுதியில்தான் வசித்ததாக புராணிக ஐதீக நம்பிக்கைகள் காலங்காலமாக நிலவி வந்திருக்கின்றன. பியாஸ் ஆற்றங்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பிரதேசம் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகுக்காக புகழ் பெற்றுள்ளது.  

ஆதியில் இப்பகுதி குல்-அந்தீ- பீட் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இப்பெயருக்கு ‘வசிக்கக்கூடிய பூமியின் உச்சிப்பீடம்’ என்பது பொருளாகும். (அதற்குமேல் மனிதர்கள் வசிக்க முடியாது எனும் உண்மையை குறிக்கிறது).

ராமாயணம், மஹாபாரதம் மற்றும் விஷ்ணுபுராணம் ஆகிய புராண இதிகாசங்களில் இந்த பிரதேசம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திரிபுராவை சேர்ந்த பெஹங்காமணி பால் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த அழகிய மலை நகரத்தின் வரலாற்றுப்பின்னணி முதலாம் நூற்றாண்டிலிருந்தே துவங்குகிறது.

இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் இப்பகுதிக்கு சரியான சாலைவசதிகள் இல்லாமல், அண்டமுடியாத ஒரு பிரதேசமாகவே இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த அழகிய கோடைவாசஸ்தலமானது உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள், தேவதாரு காடுகள், ஆறுகள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் போன்றவற்றால் சூழப்பட்டு தனது ரம்மியமான இயற்கை எழில் அம்சங்களுக்காக உலகப்புகழ் பெற்ற மலைவாசஸ்தலமாக இது திகழ்கிறது.

இவை மட்டுமல்லாமல் புராதனமான கோட்டைகள், ஆன்மிகஸ்தலங்கள், காட்டுயிர் சரணாலயங்கள் மற்றும் அணைகள் போன்றவற்றும் இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

ரூபி பேலஸ் என்றும் அழைக்கப்படும் சுல்தான்பூர் அரண்மனை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இதன் ஆதி அமைப்பு 1905ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் அழிக்கப்பட்டாலும் மீண்டும் இதன் பழைய அமைப்பிற்கு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

ராமபிரானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் ரகுநாத் கோயில் குலு பகுதியில் மற்றொரு பிரசித்தமான அம்சமாகும். இந்த கோயிலின் வடிவமைப்பு பிரமிடு கோபுர பாணி மற்றும் பஹாரி பாணி ஆகிய இரண்டின் கலவையாக காட்சியளிக்கிறது. இது 17ம் நூற்றாண்டில் ராஜா ஜகத் சிங் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

இங்குள்ள பிஜ்லி மஹாதேவ் கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் யாத்ரீகர்கள் மத்தியில் பிரபலமான மற்றொரு ஆன்மீகத்தலமாகும். பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் சிவனுக்காக எழுப்பப்பட்டிருக்கிறது.

வழங்கிவரும் கதைகளின்படி இந்த கோயிலில் இருக்கும் சிவலிங்கம் மின்னல் தாக்கி பல துண்டுகளாக உடைந்துவிட்டதாகவும், பின்னர் கோயில் அர்ச்சகர்கள் வெண்ணையை பயன்படுத்தியே அந்த துண்டுகளை ஒன்றுசேர்த்து ஒட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஜகன்னாத் தேவி மற்றும் பாஷேஷ்வர் மஹாதேவ் கோயில் ஆகியவை பஹாரி கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிப்பதாக உள்ளன. பொதுவாக இமயமலை அடிவாரப்பகுதிகளில் வசித்த இனத்தாருக்குரிய அடையாளமாக இந்த பஹாரி பாணி அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

புராதனமான ஜகன்னாத் தேவி கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அறியப்படுகிறது. பெண் சக்தியின் வடிவமான வடிவமான துர்கா தேவியின் உருவங்கள் இந்த கோயிலின் சுவர்களில் காணப்படுகின்றன.

பார்வையாளர்கள் ஒன்றரை மணிநேர மலையேற்றத்திற்கு பின் இந்த கோயிலை சென்றடைய வேண்டியுள்ளது. பாஷேஷ்வர் மஹாதேவ் கோயில் 9ம் நூற்றாண்டில் சிவனுக்காக கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் வெகு நுணுக்கமான பாறைக்குடைவு அலங்கார அமைப்புகள் காணப்படுகின்றன.

கைஸ்தர், ரைசன் மற்றும் தேவ் திப்பா போன்றவை குலுவில் அமைந்துள்ள இதர பிரசித்தமான சுற்றுலா அம்சங்களாகும். அடர்ந்த தேவதாரு காடுகளின் மத்தியில் இவை அமைந்துள்ளன. பனி நிரம்பிய ஏரிகளின் ஊடே மலையேற்றம் செய்துதான் இந்த இடங்களை அடைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குலுவுக்கு விஜயம் செய்யும் பயணிகள் பலவிதமான காட்டுயிர் அம்சங்களையும் ‘கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்’கில் காணலாம். இதில் 180 வகையான விலங்கினங்கள் வசிக்கின்றன.

கடல் மட்டத்திலிருந்து 76 மீ உயரத்தில் பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பண்டோஹ் அணையும் பார்க்க வேண்டிய மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த நீர் மின்னுற்பத்தி அணைத்தேக்கம் குலு மற்றும் மணாலி பகுதிகளின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாய் அமைந்துள்ளது.

டிரக்கிங் எனப்படும் மலையேற்றம், சிகரமேற்றம், மலை நடைப்பயணம், பாராகிளைடிங் மற்றும் ஆற்றுப்பரிசல் சவாரி போன்ற சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குல்லு சுற்றுலாத்தலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

லடாக் வாலி, ஜன்ஸ்கார் வாலி, லஹௌல் மற்றும் ஸ்பிட்டி போன்றவை இங்குள்ள முக்கிய மலையேற்ற பாதைகளாகும். இந்தியாவிலேயே பாராகிளைடைங் விளையாட்டிற்கு குலு பிரசித்தமாக அறியப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சோலங், மஹாதேவ் மற்றும் பிர் ஆகிய இடங்களில் உள்ள பாராசூட் குதிப்பு தளங்கள் பிரபல்யமானவையாகும். சிகரமேற்றத்தில் ஈடுபடுவதற்கு ஏற்ற மலைச்சிகரங்களாக இங்கு ஹனுமான் திப்பா, பியாஸ் குண்ட், மலனா, தேவ் திப்பா மற்றும் சந்த்ரதால் ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ளன. பியாஸ் ஆற்றில் மீன்பிடிக்கும் பொழுதுபோக்கிலும் பயணிகள் ஈடுபடலாம்.

குலு சுற்றுலாத்தலத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். குலுவுக்கு அருகில் புந்தர் விமான நிலையம் அல்லது குலு மணாலி விமான நிலையம் அமைந்துள்ளது.

இது குலு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. டெல்லி, சிம்லா, சண்டிகர்,பதான்கோட் மற்றும் தரம்சாலா போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக அருகில் டெல்லி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

குலுவுக்கு அருகில் 125 கி.மீ தூரத்தில் ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம் உள்ளது. இது சண்டிகர் வழியாக மற்ற நகரங்களுடன் ரயில் இணைப்பு வசதிகளை அளிக்கிறது. ஹிமாசல் பிரதேச மாநில போக்குவரத்து கழகமான HPTC ஹிமாச்சல் மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து குலுவுக்கு பேருந்து சேவைகள் அளிக்கிறது.

இது தவிர ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகமான HPTDC குலுவிலிருந்து சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களுக்கு சொகுசுப்பேருந்துகளை இயக்குகிறது.

சிறந்த கோடை விடுமுறைஸ்தலமாக புகழ்பெற்றுள்ள இந்த மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள மார்ச் முதல் அக்டோபர் வரையான பருவம் ஏற்றதாக உள்ளது. மேலும், வெளிச்சுற்றுலா அம்சங்கள் மற்றும் இயற்கை அழகை ரசிப்பதற்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் பொருத்தமாக உள்ளன.

ஆற்றுப்பரிசல் சவாரி, பாறையேற்றம், மலைநடைப்பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற சாகசப்பொழுதுப்போக்கு அம்சங்களுக்கு அக்டோபர் நவம்பர் மாதங்கள் உகந்ததாக காணப்படுகின்றன.

Please Wait while comments are loading...