நம் நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து வழிகளில் மிகவும் முதன்மையானதும் பெருன்பான்மையான மக்களால் உபயோகப்படுத்தப்படுவதும் ரயில் போக்குவரத்து தான் என்று நாம் அறிவோம். உலகின் சிறந்த ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றான இந்திய ரயில்வே மொத்த சந்தை மூலதனம் (Market Capitalization) மாலத்தீவுகள், சீசல்ஸ், தஜகிஸ்தான், பூட்டான், பிஃஜி, கிரிகிஸ்தான், லைபீரியா உட்பட 47 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட மிகவும் அதிகமாம். இந்த சுவாரஸ்ய தகவலோடு 2023 இல் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தப்போகும் பல வித்தியாசமான அமசங்களின் லிஸ்ட் இதோ!
இந்தியாவின் மிக முக்கிய அங்கமாக இருக்கும் IRCTC
இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஸ்டேஷன்கள், ரயில்கள் மற்றும் பிற இடங்களில் கேட்டரிங் மற்றும் விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்தவும், தொழில்முறைப்படுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் உருவாக்கபட்ட ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். அதோடு மட்டுமில்லாமல் பட்ஜெட் ஹோட்டல்கள், சிறப்பு சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தவும், இந்திய ரயில்வேயின் விரிவாக்கப் பிரிவாக IRCTC செயல்படுகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள் என்றால் மிகையாகாது மக்களே!

லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்வி
கடந்த மூன்று ஆண்டுகளாக IRCTC ஈட்டிய வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது, வருவாய் குறித்த மொத்த விபரங்கள், வருவாய் குறைவதற்கான காரணங்கள் மற்றும் அதை சரி செய்வதற்கான திட்டங்கள் என்னவென்று நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் IRCTC ஈட்டிய வருவாய், பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை, IRCTC அறிமுகப்படுத்தப்போகும் புதிய அம்சங்கள் போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான செலவையே முந்தி விட்ட IRCTC யின் ஆண்டு வருமானம்
இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஸ்ரீ அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்திய ரயில்வேயின் வருவாய் 2019 - 2020 நிதியாண்டில் 2342 கோடி, 2020 - 2021 நிதியாண்டில் 861 கோடி, 2021 - 2022 நிதியாண்டில் 1950 கோடியாக இருக்கிறது என்று கூறினார். 2019 - 2020 எப்பொழுதும் போல இயங்கியதால் அதன் வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்தது. ஆனால் 2020 - 2021 இல் கொரோனா தொற்றால் உலகெங்கும் பல நிறுவனங்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது போல, IRCTC ம் நலிவைக் கண்டது. ஆனால் 2021 - 2022 இல் கொரோனா பெரும்தொற்று நீங்கி வழக்கம் போல இயங்கியதால் வருமானம் உச்சத்தை தொட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு IRCTC ஈட்டிய வருமானம் அயோத்தியின் ராமர் கோவில் கட்டும் செலவை விடவே அதிகம். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ஆகும் செலவு 1800 கோடி ரூபாய், IRCTC இன் வருவாய் 1900 கோடியாகும்.

லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக திகழும் IRCTC
ஒரு இடத்திற்கு இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெரும்பாலான மக்கள் சௌகரியம், குறைந்த விலை கட்டணம், பயண தூரம், நேரம் காரணமாக ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்கின்றனர். இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர் இந்திய ரயில்வேயில் 2019 - 2020 நிதியாண்டில் 5229 லட்சம், 2020 - 2021 நிதியாண்டில் 3052 லட்சம், 2021 - 2022 நிதியாண்டில் 7343 லட்சம், 2022 -2023 (அக்டோபர் வரை) நிதியாண்டில் 4600 லட்சம் மக்கள் IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

IRCTC இன் அட்டகாசமான புதிய சேவைகள்
நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடையும் அளவிற்கு IRCTC தனது இணையதளம் மற்றும் Rail Connect மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ரயில் சேவைகளை தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்றடைய உதவுகிறார்கள். ரயில் டிக்கெட்டுகள், ஹோட்டல் புக்கிங், டூர் பேக்கேஜ்கள் மற்றும் ரயில்நீர் நிறுவனம் மூலமாக இந்திய ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது என்றும் தெரிவித்தார். அதோடு தரமான உணவுகளை வழங்குவது, இ - டிக்கெட் அறிமுகப்படுத்துதல், லாயல்டி ஸ்கீம், ஓய்வறைகள் மேம்படுத்துதல், வாடகை கார்கள், பயணிகளுக்கு சேவை வழக்கும் வாடிக்கையாளர் சேவை மையம், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அருகில் உணவகங்கள் என எல்லாவற்றிலும் அப்கிரேடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

IRCTC இன் சந்தை மூலதனம்
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் ரயில் சேவை வழங்குவதோடு, விமானம் மற்றும் பேருந்து டிக்கெட்டுகள், தங்குமிடங்கள், சுற்றுலா பேக்கேஜ்கள் மற்றும் பிற பயணத் தேவைகளை உள்ளடக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை வழங்குகிறது. இ - டிக்கெட், குடிநீர், ஸ்டேட் தீர்த்தா, சுற்றுலா மற்றும் கேட்டரிங் சேவைகளால் IRCTC ரூ. 64,000 ஆயிரம் கோடியை சந்தை மூலதனமாக (Market capital) அடைந்துள்ளது.

47 நாடுகளின் GDP யை மிஞ்சிய IRCTC
கிரிகிஸ்தான் - ரூ. 62000 ஆயிரம் கோடி, தஜகிஸ்தான் - ரூ. 59000 ஆயிரம் கோடி, பிஃஜி - ரூ. 41800 ஆயிரம் கோடி, மாலத்தீவுகள் - ரூ. 40000 ஆயிரம் கோடி, லைபீரியா - ரூ. 27000 ஆயிரம் கோடி, பூட்டான் - ரூ. 20000 ஆயிரம் கோடி, சீசல்ஸ் - ரூ. 12000 ஆயிரம் கோடியை மார்கெட் கேப்பிடல் ஆக கொண்டுள்ளது. இது போன்று, மலாவி, டோகோ, பார்படோஸ், கயானா, புருண்டி, சான் மரினோ, கம்பியா, சாலமன் தீவுகள் உட்பட 47 நாடுகளின் நிகர வருமானத்தை விட இந்திய ரயில்வேயின் மார்கெட் கேபிடல் அதிகமாகும்.
நாம் நாள்தோறும் பயணிக்கும் இந்திய ரயில்வே இப்படி ஒரு உச்சத்தில் இருப்பது ஒரு நல்ல விஷயமே! ஏற்கனவே அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் IRCTC வருங்காலத்தில் உலக அளவில் ஒரு மிரட்டக்கூடிய ரயில் நெட்வொர்க் ஆக உருவெடுக்கப்போகிறது என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.