பஞ்சாப் சுற்றுலா – வீரமும் வளமும்  நிறைந்த வட மேற்கிந்திய மாநிலம்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

வட மேற்கிந்தியாவில் வீற்றிருக்கும் பஞ்சாப் மாநிலமானது மேற்கில் பாகிஸ்தான் நாட்டையும் இதர திசைகளில் ஹிமாசலப்பிரதேஷம், காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களையும் எல்லைகளாக கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகச்சிறிய மாநிலங்களின் ஒன்றாக உள்ள போதிலும் வளமான மாநிலமாக இது அறியப்படுகிறது.

1947-ம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பஞ்சாப் பிரதேசத்தை பஞ்சாப் என்றும் பாகிஸ்தான் என்றும் பிரித்தபிறகும், 1966ம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை ஹிமாசல் பிரதேசம் என்றும் ஹரியானா என்று புதிய மாநிலங்கள் இதிலிருந்து உருவாக்கப்பட்டன.

நெடிய வரலாற்று பின்னணி நிரம்பிய இந்த பூமியின் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் போன்றோர் இந்தியாவுக்கு வருகை தந்தனர்; போர்களை நிகழ்த்தினர்; இந்திய மண்ணின் வரலாற்றையும் மாற்றினர்.

பின்னாளில் கடல் வழியே இந்தியாவின் தென்பகுதிக்கு வந்து பின்னர் இந்தியா முழுமையும் ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அது ஒரு தனி வரலாறாக நீண்டு முடிந்தது.

கிரேக்கர்கள் மற்றும் ஜொராஷ்டிரர்களின் வரலாற்றுக்குறிப்புகளில் இந்த பஞ்சாப் பூமி உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கும் பெருமையை பெற்றிருக்கிறது. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் வளமான பூமியாக பஞ்சாப் தேசத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே விவசாயத்தொழில் இந்த மண்ணின் வளத்துக்கான் அடிப்படை காரணியாக இருந்து வந்துள்ளது என்பதை சொல்லவே தேவையில்லை. சீக்கிய மதத்தினர் பரவலாக வசிக்கும் பூமி எனும் தனித்துவமான அடையாளத்தையும் இந்த பஞ்சாப் மாநிலம் பெற்றிருக்கிறது.

அறிவியல் முன்னேற்றங்களும் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் நிகழ்ந்த 20ம் நூற்றாண்டின் பாதியிலிருந்தே இந்த பஞ்சாப் மாநிலம் பல்வேறு இயந்திர தொழில்நுட்ப கருவிகளின் தயாரிப்பு மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் கேந்திரமாக திகழ்ந்து வருகிறது.

பலவகையான உபகரணங்கள், இயந்திரங்கள், விளையாட்டுப்பொருட்கள், ஸ்டார்ச்சு, விவசாய உரத்தயாரிப்பு, சைக்கிள் தயாரிப்பு, சர்க்கரை மற்றும் ஆடை உற்பத்தி போன்றவற்றில் இந்த மாநிலம் முன்னணியில் உள்ளது.

குறிப்பாக விவசாயக்கருவிகள்,அறிவியல் உபகரணங்கள் மற்றும் மின்சாதனக்கருவிகள் போன்றவற்றுக்கு இம்மாநிலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது.

பருவநிலை, புவியியல் அமைப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்கள்!

வளம் நிரம்பிய மண் இயல்பை பெற்றிருக்கும் இந்த பஞ்சாப் மாநிலம் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும் பாசனக்கால்வாய்களை கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் வடகிழக்கு பகுதி இமாலயத்தின் அடிவார மலைப்பகுதிகளில் வீற்றிருக்கிறது.

இதன் தென்மேற்குப்பகுதி ராஜஸ்தான் தார் பாலைவனப்பிரதேசத்தோடு இணைந்திருக்கிறது. பருவநிலையை பொறுத்தவரையில் பஞ்சாப் மாநிலம் கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தையும் கடும் குளிர் நிலவும் குளிர்காலத்தையும் பெற்றிருக்கிறது. மழைக்காலங்களில் கடும் மழைப்பொழிவையும் இம்மாநிலம் பெறுகிறது.

இருப்பினும் இயற்கையான வனப்பகுதி என்று எதுவும் இந்த பஞ்சாப் மாநிலத்தில் இல்லை. ஆனால் ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், பீச், அத்தி, மல்பெரி, ஏப்ரிகாட், பாதாம் மற்றும் பிளம் போன்ற பழங்கள் இப்பகுதியில் அதிகம் விளைகின்றன.

இம்மாநிலத்தின் பெரும்பாலான நிலப்பகுதி புதர்கள், செடிகள் மற்றும் புல்வெளி ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறது. கோதுமை, நெல், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் இங்கு விளைவதால் இது ‘இந்தியாவின் களஞ்சியம்’ எனும் சிறப்புப்பெயரையும் பெற்றிருக்கிறது.

பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் தேனி வளர்ப்பு போன்ற  குடிசைத்தொழில்களும் இம்மாநிலத்தில் பரவலாக வழக்கத்தில் உள்ளன. குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் எருமைகள் போன்றவை இங்கு வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டு விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.  இப்பகுதியில் ஓடும் ஆறுகளில் முதலைகள் அதிகம் வசிக்கின்றன.

பஞ்சாப் சுற்றுலா சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும் பிரசித்தி பெற்றுள்ளன.

கம்பீரமான அரண்மனைகள், கோயில்கள், சன்னதிகள் மற்றும் வரலாற்று யுத்தங்கள் நடந்த ஸ்தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த நகரை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.

இது தவிர ஃபரித்கோட், ஜலந்தர், கபுர்தலா, லுதியானா, பதான்கோட், பாடியாலா, மொஹாலி போன்ற பல முக்கியமான நகரங்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுற்றுலாத்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களோடு பஞ்சாப் மாநிலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்கள் பஞ்சாப் மாநிலத்தின் எல்லா சுற்றுலா சுவராசியங்களிலும் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. இங்கு கோபிந்த்கர் கோட்டை, கிலா முபாரக், ஷீஷ் மஹால், ஜகஜித் அரண்மனை போன்ற வரலாற்று சின்னங்கள் கடந்து போன உன்னத காலங்களின் தடயங்களாக இங்கு வீற்றிருக்கின்றன.

இவை தவிர அட்டாரி பார்டர், ஆம் காஸ் பாக், பரதாரி தோட்டப்பூங்கா, தக்காத் இ அக்பரி, ஜாலியன் வாலா பாக் மற்றும் ரௌஸா ஷரீஃப் போன்ற முக்கியமான அம்சங்களும் பஞ்சாபில் அவசியம் பார்க்க வேண்டியவையாகும்.

கவர்ன்மெண்ட் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரி, ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம், புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி மற்றும் மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் போன்றவை பஞ்சாபில் உள்ள முக்கியமான அருங்காட்சியகங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

வரலாற்று பிரியர்கள் விரும்பக்கூடிய பல அரும்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக சீக்கிய மதத்தை சேர்ந்தவர்களுக்கான பல்வேறு யாத்திரை ஸ்தலங்களை பஞ்சாப் மாநிலம் தன்னுள் கொண்டிருக்கிறது.

தேரா சந்த்கர், குருத்வாரா கர்ணா சாஹிப், குருத்வாரா ஷீ தர்பார் சாஹிப்,  குருத்வாரா ஷாஹித்கஞ்ச் தல்வாண்டி ஜட்டன் மற்றும் இன்னும் ஏராளமான  குருத்வாரா ஸ்தலங்கள் இம்மாநிலம் முழுதும் பரவி அமைந்துள்ளன.

இவை தவிர ஷீ ராம் திரத் கோயில், துர்கையானா கோயில், ஷிவ் மந்திர் கத்கர், காமாஹி தேவி கோயில், தேவி தலாப் மந்திர் போன்ற முக்கியமான ஹிந்து வழிபாட்டுத்தலங்களும் பஞ்சாப் மாநிலத்தில் வீற்றிருக்கின்றன. மூரிஷ் மசூதி எனும் முஸ்லிம் வழிபாட்டுத்தலம் முஸ்லிம்களுக்கான முக்கியமான மசூதியாக அமைந்துள்ளது.

சங்கோல் தொல்லியல் அருங்காட்சியகம், ரூப்நகர் போன்றவை இம்மாநிலத்தில் உள்ள முக்கியமான அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் ஸ்தலங்களாகும்.

சாத்பீர் விலங்குகாட்சி சாலை, தாக்னி ரெஹ்மாபூர் காட்டுயிர் சரணாலயம், காஞ்ச்லி சதுப்பு நிலப்பகுதி, ஹரிகே சதுப்புநிலம், டைகர் சஃபாரி மற்றும் டீர் பார்க் போன்றவை பஞ்சாப் மாநிலத்தின் இயற்கை சார்ந்த சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

மக்கள் மற்றும் கலாச்சாரம்!

பஞ்சாப் மாநில சுற்றுலாவானது பயணிகளுக்கு பஞ்சாபி கலாச்சாரம் குறித்த பரவலான அறிமுகத்தை அளிக்கிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக சீக்கிய மதம் பின்பற்றப்படுகிறது.

சீக்கிய மதத்தின் தலைமைக்கேந்திரமாக விளங்கும் அம்ரித்சர் தங்கக்கோயில் பஞ்சாப் மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா மற்றும் யாத்ரீக ஸ்தலமாக உலகப்புகழ் பெற்றிருக்கிறது.

பஞ்சாபிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குருத்வாரா அமைந்துள்ளது என்பது குறிப்பிடவேண்டிய ஒரு சிறப்பம்சமாகும். சீக்கிய மதத்துக்கு அடுத்தபடியாக ஹிந்து மதம் இங்கு வசிக்கும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இம்மாநிலத்தின் அரசாங்க மொழியாக பஞ்சாபி மொழி விளங்கிவருகிறது.

பஞ்சாபி மக்கள் உற்சாக மன இயல்பு கொண்டவர்களாகவும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஆர்வம் மிக்கவர்களாகவும் உள்ளனர்.

இசை, நடனம் மற்றும் சுவையான உணவு என்பது இவர்களது கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ள அம்சங்களாகும். லோஹ்ரி, பசந்த், பைசாகி மற்றும் டீஜ் போன்றவை பஞ்சாப் மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களாகும்.

பாங்க்ரா எனப்படும் பஞ்சாபி நடன வடிவம் இந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் தற்போது இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் பிரசித்தி பெற்றுள்ளது.

ஆரம்ப காலத்தில் அறுவடைக்கால திருவிழா நடனமாக இருந்து வந்த இது படிப்படியாக நாகரிக நடன வடிவமாக மாறிவிட்டது. இந்த மாநிலத்தில் விளங்கி வரும் நாட்டார் கலை வடிவங்களும் பஞ்சாபி கலாச்சாரத்தின் நெடிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.  

Please Wait while comments are loading...