Search
  • Follow NativePlanet
Share
» »அறியப்படாத அழகிய மலைவாசஸ்தலங்கள்!

அறியப்படாத அழகிய மலைவாசஸ்தலங்கள்!

By

இந்தியாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படி இயற்கையின் அற்புத அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடங்கள் மலைவாசஸ்தலங்கள்தான்.

இந்த மலைப்பகுதிகள் ஆர்பரித்துக்கொட்டும் அருவிகளையும், ஏகாந்தமாய் படகுப் பயணம் செய்ய ஏரிகளையும், மழலை மொழியில் கீரிச்சிட்டு அங்குமிங்கும் பறந்து செல்லும் பறவைகளையும், இனிமையான வெப்பநிலையையும் கொண்டிருப்பதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மலைவாசஸ்தலங்களையே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

எனினும் போன இடங்களுக்கே எத்தனை நாட்கள் சுற்றுலாச் செல்வது என்று ஆதங்கப்படுபவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களுக்காகவும், புதிய இடங்களுக்கு சுற்றுலாச் செல்ல விருப்பமுள்ள பயணிகளுக்காகவும் இந்தியாவின் அறியப்படாத அழகிய மலைவாசஸ்தலங்கள் சில பட்டிலிடப்பட்டுள்ளன.

லோனாவலா

லோனாவலா

மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து 89 கி.மீ தூரத்திலும், புனேயிலிருந்து 64 கி.மீ தொலைவிலும் லோனாவலா மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. இந்த கவின் கொஞ்சும் மலைவாசஸ்தலம் சந்தடி மிகுந்த நகரச் சூழலிலிருந்து முற்றிலும் விலகி, வருடம் முழுவதுமே மாசற்ற சுற்றுப்புறச்சூழல், தூய்மையான காற்று, இனிமையான பருவநிலை ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ளதால் ஒரு பிணிதீர்க்கும் ஓய்வுஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இதன் காரணமாக இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஆண்டுதோறும் அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

படம் : Ravinder Singh Gill

ஆலி

ஆலி

உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.

படம் : Mandeep Thander

நெல்லியம்பதி

நெல்லியம்பதி

பாலக்காடு நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது நெல்லியம்பதி மலைவாசஸ்தலம். எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களும், காப்பித் தோட்டங்களும் சூழ்ந்து காணப்படும் நெல்லியம்பதி ஸ்தலத்தை அடைய நாம் எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை கடந்துசெல்ல வேண்டும்.

முன்ஷியாரி

முன்ஷியாரி

முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

படம்

யூக்சோம்

யூக்சோம்

இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு யூக்சோம் நகருக்கு உண்டு. அதாவது இங்குள்ள உள்ளூர் மக்களே சுற்றுலாக்குறிய சுற்றுப்புறச்சூழலை சீராக்குவதற்கான மேம்பாடுகளை செய்து வருவதால், இந்த இடம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

படம் : Kothanda Srinivasan

மாத்தேரான்

மாத்தேரான்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே போன்ற பரபரப்பான, சந்தடி நிறைந்த பெரு நகரங்களுக்கு வெகு அருகில் அமைந்துள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிற்றுலாத்தலமாக மாத்தேரான் புகழ்பெற்றுள்ளது. மாத்தேரான் மலைவாசஸ்தலத்தின் உள்ளே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மோட்டார் வாகனங்களில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபோல ஆசியாவிலேயே வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ள ஒரே பகுதியாக மாத்தேரான் திகழ்கிறது.

படம் : Omkar A Kamale

தனௌல்டி

தனௌல்டி

ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் இதன் அருகில் இருக்கும் டூன் பள்ளத்தாக்கின் மதிமயங்கும் அழகில் சொக்கி விழுவது நிச்சயம்.

படம் : Alokprasad

பித்தோராகர்

பித்தோராகர்

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும், மறுபுறம் அழகிய அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அதோடு இங்கு பாய்ந்தோடும் காளி ஆறு பித்தோராகர் மாவட்டத்தையும், நேபாள் பகுதியையும் பிரிக்கிறது.


படம் : Shyamal

ராமக்கால்மேடு

ராமக்கால்மேடு

ராமக்கால்மேடு எனும் பெயருக்கு ராமபிரானின் பாதம் பட்ட மண் என்பது பொருளாகும். அதாவது சீதாதேவியை தேடி ராமர் இப்பகுதிக்கு வந்தபோது இந்த மலையில் அவர் காலடி பட்டதால் இம்மலைப்பகுதி ராமக்கால்மேடு என்ற பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலையிலிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும் மறு புறம் தமிழ்நாட்டின் எழிலையும் ரசிக்க முடிவதை இதன் சிறப்பம்சமாக சொல்லலாம்.

ஜோஷிமத்

ஜோஷிமத்

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் புனித நகரமான ஜோஷிமத் இமயமலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த எழில் கொஞ்சும் மலைப்பிரதேசத்தில் சுமார் 1200 வருடங்கள் பழமையான கல்பவிருக்ஷா என்ற மரம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்து ஆதி குரு ஷங்கராச்சார்யா தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

படம் : christian0702

ராணிபுரம்

ராணிபுரம்

காசர்கோட் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ராணிபுரம் மலைவாசஸ்தலத்தில் அருமையான 2 டிரெக்கிங் பாதைகள் உள்ளன. இந்த பாதைகள் அமைதியும், அடர்த்தியும் கொண்ட அழகான பசுமை காடுகளால் சூழப்பட்டுள்ளன. இங்கு விதவிதமான பட்டாம்பூச்சிகளுடன், எண்ணற்ற பறவைகளையும் நீங்கள் கண்டு ரசிக்கலாம். அதோடு கேரள வனத்துறையால் வனவிலங்கு சரணாலமாக மாற்றப்பட்டுள்ள ராணிபுரம் காடுகளில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட மிருகங்களையும் பார்க்க முடியும்.

நௌகுசியாடல்

நௌகுசியாடல்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான நௌகுசியாடலில் உள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்காகும். இவ்வாறு மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.

படம் : Dr Satendra

தோரண்மால்

தோரண்மால்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ளது தோரண்மால் மலைவாசஸ்தலம். நாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால், மஹாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது.

படம் : Angelo Correia

லாசுங்க்

லாசுங்க்

வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலை நகரமான லாசுங்க், கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அடுக்கு நீர்வீழ்ச்சிகள், தூய நீரோடைகள், மற்றும் பரந்த கண்ணுக்கினிய ஆப்பிள் தோட்டங்கள் ஆகியன சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றவை.

படம் : Snthakur

சௌகோரி

சௌகோரி

உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் வடக்கில் திபெத் மற்றும் தெற்கில் தேராய் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த சிறிய கிராமத்தில் கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகள் மற்றும் பசுமையான பைன் மரங்கள் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். அவற்றோடு கவர்ச்சியான சோள வயல்கள் மற்றும் பழத்தோப்புகள் போன்றவை இங்கு பயணிகளை கவரும் அம்சங்கள்.

படம் : Tribhuwan

காலிம்பொங்

காலிம்பொங்

காலிம்பொங் இரு வேறு உலகங்களின் சிறந்த பகுதிகளை உங்களுக்கு வழங்குகின்றது. இங்கு நீங்கள் மேற்கு வங்காளத்தின் பாரம்பரியமான கலை, உணவு, மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அனுபவித்து மகிழலாம். அதைத்தவிர இங்குள்ள புத்த மத செல்வாக்கானது, உங்களுக்கு இமயமலையின் மடியில் மஹாபாரத காலத்தின் நடுவில் வாழ்வது போன்ற உணர்வை வழங்குகின்றது.

படம் : Anuj Kumar Pradhan

ராணிக்கேத்

ராணிக்கேத்

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ராணிக்கேத் மலைவாசஸ்தலம் நைனித்தால் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், அல்மோரா நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதைக் கழிப்பதற்கேற்றவாறு பைன், ஓக் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த பசுமையான இயற்கை எழிற்சூழலை கொண்டுள்ளது. இது செழிப்பான புல்வெளிகள் மற்றும் இயற்கை எழில் ததும்பி வழியும் வனப்பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

படம் : Mrneutrino

மால்ஷேஜ் காட்

மால்ஷேஜ் காட்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன், கடல் மட்டத்திலிருந்து தலை சுற்ற வைக்கும் 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது மால்ஷேஜ் காட் மலைவாசஸ்தலம். இங்கு மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகளும், சரணாலயத்தில் காணப்படும் பல வகைத்தாவரங்களும், உயிரினங்களும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

படம் : Rudolph.A.furtado

கௌஸனி

கௌஸனி

உத்தரகண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 6075 அடி உயரத்தில் கௌஸனி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி இப்பகுதியின் அழகில் மயங்கி, கௌஸனியை `இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என வியந்து கூறியுள்ளார்.

படம் : Ekabhishek

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+