Search
  • Follow NativePlanet
Share

கேரளா சுற்றுப்பயணம் - கடவுளின் சொந்த தேசத்தில் பட்டாம்பூச்சிகளாய் சுற்றித் திரிவோம்!

கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர்.

நேஷனல் ஜாக்ரபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில்  'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும்,  சிறிய கிராமமாகட்டும்  அது 'கடவுளின் சொந்த நாடு'என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.

கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாக்குளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன.

அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும்  சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம்  மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள். 

மனதை கொள்ளை கொள்ளும் நீர்பரப்புகள்!

வர்கலா, பேக்கல், கோவளம், மீன்குன்னு, செராய், பய்யம்பலம், ஷங்குமுகம், முழுப்பிலங்காடு உள்ளிட்ட கடற்கரைகள் கேரள பிரதேசத்தை இணையற்ற சுற்றுலா மையமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.

கேரளாவின் மயக்கும் உப்பங்கழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலப்புழா, குமரகம், திருவல்லம், காசர்கோட் போன்ற பகுதிகளில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்வில் அதுவரை அனுபவவித்திடாத நொடிகளாகவே பேரின்பத்தை வாரி இறைத்து நகர்ந்து செல்லும்.

அதிலும் குறிப்பாக இந்த உப்பங்கழிகளில் மிதக்கும் கெட்டுவல்லங்களும், படகு இல்லங்களும் உங்களுக்குள் உண்டாக்கும் பரவசத்தை போன்று நீங்கள் உலகின் எத்துனை சிறந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் சுகித்துவிட முடியாது.

அதோடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பாரம்பரிய 'ஸ்நேக் போட் ரேஸ்' அல்லது பாம்புப் படகுப் போட்டியில் உப்பங்கழிகளின் சலசலக்கும் நீரலைகளை கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளை மெய்சிலிர்க்க வேடிக்கை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எல்லையற்றது.

வேம்பநாடு ஏரி, அஷ்டமுடி ஏரி, பூக்கோட் ஏரி, சாஷ்டாம்கொட்டா ஏரி, வீரன்புழா வெள்ளயாணி ஏரி, பரவூர் காயல், மனச்சிரா போன்ற ஏரிகள் கேரளாவின் வளமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த உதாரணங்கள். இதில் வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.  

கேரள மலைவாசஸ்தலங்கள் - இயற்கையன்னையின் இணையில்லா படைப்பு!

கேரளாவின் தொன்னலம் வாய்ந்த அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

அதோடு வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு ஸ்தலமாக மூணார் மலைப்பிரதேசம் அறிப்படுகிறது. மேலும் கேரளாவில் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைவாசஸ்தலங்கள் ஏராளம் நிறைந்து கிடக்கின்றன.

இதில் தேக்கடி அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும் பயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி பார்த்தாலும் கேரளாவின் மலைவாசஸ்தலங்களின் மடியில் உற்சாகம் பொங்கும் சுற்றுலா அனுபவங்கள் எக்கச்சக்கம் காத்துக்கிடக்கின்றன. 

கலாச்சாரம், சமயச் சிறப்பு, உணவு வகைகள் - ஒருங்கிணைந்த அதிசயம்!

இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன.

கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம்.

அதோடு பரிசமுட்டு, கூடியாட்டம், கிறிஸ்த்தவர்களின் சவுட்டு நாடகம், இஸ்லாமியர்களின் ஒப்பனா என்பன போன்ற புகழ்பெற்ற நடன மற்றும் நாடக வடிவங்களில் சமயச் சாயம் பூசப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் முண்டு என்ற பாரம்பரிய உடை உடுத்தும் கேரள மக்கள் கர்நாடக சங்கீதத்திலும் வல்லவர்களாகவே விளங்கி வருகின்றனர்.

புட்டு, இடியாப்பம், உன்னி அப்பம், பாலடை பிரதமன் (ஒரு வகை பாயசம்), நேந்திரம் பழ சிப்ஸ், மீன் உணவுகள், செவ்வரிசி போன்ற பதார்த்தங்கள் கேரளாவுக்கே உரித்தான உணவு வகைகள்.

இங்கு ஆடம்பரமான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு, வாழை இலையில் பரிமாறப்படும் முறை 'சத்யா' என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதிலும் ஓணம் திருவிழாவின் போது இதே சத்யா பாணி விருந்து 'ஓணம் சத்யா' என்ற பெயரில் வெகு விமரிசையாகவும், ஆடம்பரமாகவும்  நடத்தப்படும்.

கேரளாவில் ஹிந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் முக்கிய மதங்களாக விளங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹிந்துக் கடவுளான பகவதி அம்மனுக்கு கேரளா முழுக்க எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன.

இவற்றில் சோட்டாணிக்கரா பகவதி கோயில், ஆட்டுக்கால் பகவதி கோயில், கொடுங்கல்லூர் பகவதி கோயில், மீன்குளத்தி பகவதி கோயில், மங்கோட்டு காவு பகவதி கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிரதான மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் பகவதி கோயில்களாகும்.  

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோயிலை பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் சபரிமலை கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவைதவிர திரிசூரில் உள்ள அயிராணிக்குளம் மஹாதேவா கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவல்லா ஸ்ரீவல்லப கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிற முக்கிய கோயில்களாக கருதப்படுகின்றன.

இந்தக் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் மாமலை போன்று காட்சியளிக்கும் யானைகள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு தெய்வ விகரகங்களை சுமந்து கொண்டு வீதிகளில் ஊர்வலம் வரும் காட்சி சுற்றுலாப் பயணிகளின் நினைவுகளில் என்றும் அழியாச் சித்திரமாய் நிலைத்திருக்கும்.

கேரள மாநிலத்தின் சிறப்புகளுக்கெல்லாம் கிரீடம் வைப்பது போன்ற ஒரு செய்தி அத்வைத வேதத்தை தோற்றுவித்த ஆதி சங்கரர் காலடி என்ற கேரள மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தார் என்பதே.

மலயாட்டூர் தேவாலயம், கொச்சி செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம், போர்ட் கொச்சியில் உள்ள சாண்டா குரூஸ் பெசிலிக்கா, கோட்டயத்தின் செயின்ட் மேரிஸ் போரன்ஸ் தேவாலயம் உள்ளிட்டவை கேரளாவின் பிராதன கிறிஸ்தவ தேவாலயங்களாக கருதப்படுகின்றன.

மேலும் பழயங்காடி மசூதி, மடாயி மசூதி, சேரமான் ஜூம்மா மசூதி, கஞ்சிரமட்டம் மசூதி, மாலிக் தீனர் மசூதி போன்றவை கேரளாவின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாகும். 

கேரளா சேரும் இடங்கள்

  • ஆலப்புழா 77
  • கோவளம் 39
  • வர்கலா 34
  • கோட்டயம் 25
  • கோழிக்கோடு 29
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed